கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம்… முல்லைப்பெரியாறு நீர்மட்டம் குறைக்க கோரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டி கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம்: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டி கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம்:
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.
இதன் பிறகு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் இடுக்கி அணையை சென்றடையும். ஆனால் அந்த அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.