/indian-express-tamil/media/media_files/2025/04/09/WtIQqu6qKWFefvMUt8Ov.jpg)
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது வழக்கு தொடர அனுமதி
டந்த 2017 முதல் 2020 வரை வீணாவுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஐடி நிறுவனத்துக்கு மொத்தமாக ரூ.1.72 கோடியை கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆா்.எல்) நிறுவனம் வழங்கியதாக மலையாள பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. ஹாா்டுவோ் மட்டும் பிற ஆலோசனைகள் தொடா்பான சேவைகளை வழங்குவதற்காக ஐடி நிறுவனத்துடன் சி.எம்.ஆா்.எல் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்தவொரு சேவையும் வழங்கப்படாமல் வீணாவின் ஐடி நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் சி.எம்.ஆா்.எல் நிறுவனம் பணம் வழங்கியதாக அந்த செய்தியில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனடிப்படையில், கேரள உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பினராயி விஜயன் மற்றும் அவரது மகளுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதனிடையே, இந்த மோசடி புகார் குறித்து மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறையின் கீழ் இயங்கும் தீவிர மோசடி விசாரணை பிரிவு, விசாரணை நடத்தியுள்ளது. மேலும், கொச்சியில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில், வீணாவுக்கு சொந்தமான நிறுவனம் ரூ. 2.7 கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், நிறுவனச் சட்டப் பிரிவுகள் 447, 448 இன் கீழ் வீணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மோசடி செய்த தொகையைவிட 3 மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள வீணா உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்குப்பதிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
"இந்த விவகாரத்தில் வழக்கு ஆவணங்களைக் கோரி (SFIO) தீவிர மோசடி விசாரணை பிரிவு-க்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். SFIO-வின் குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள முன்னறிவிக்கப்பட்ட குற்றங்களின் கீழ் வருகின்றன. நாங்கள் ஆவணங்களை ஆராய்ந்து பின்னர் வழக்குப் பதிவு செய்வோம்," என்று ED மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
CMRL நிறுவனம் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.135 கோடி வரை பரிவர்த்தனைகளைச் செய்துள்ளதாக SFIO வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கேரள முதல்வருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நபர் இந்த வழக்கை வாதாடுவார் என்றும் கேரள முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் கேரள அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள சூழலில், முதலமைச்சர் பிணராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கோரியுள்ளன. "அரசியல் ரீதியாக நோக்கம் கொண்ட" வழக்கு என்று சிபிஐ(எம்) கூறியுள்ளது.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் மகள் மீதான குற்றச்சாட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.