கேரள முதல்வர் பினராயி விஜயனின் நம்பிக்கைக்குரியவரும், உறுதியான சித்தாந்தவாதியுமான சிபிஐ(எம்) கண்ணூர் பகுதியில் முக்கியப் பிரமுகருமான எம்.வி. கோவிந்தன் மாஸ்டர் அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
69 வயதான எம்.வி கோவிந்தன், மூன்று முறை எம்.எல்.ஏ., விஜயன் அரசாங்கத்தில் இரண்டாம் இடத்தில் தலைவராக உள்ளார். உள்ளாட்சி மற்றும் கலால் துறைகளைக் கவனிக்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக தானாக முன்வந்து பதவியில் இருந்து விலகிய கொடியேரி பாலகிருஷ்ணனுக்குப் பிறகு கோவிந்தன் பதவியேற்றார்.
கோவிந்தனைத் தேர்வு செய்ததன் மூலம், கண்ணூரில் இருந்து மாநிலச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் முப்பதாண்டுப் பாரம்பரியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது. 1992 முதல், அனைத்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்களும் கட்சியின் கோட்டையான கண்ணூரில் இருந்து வந்தவர்கள். இந்த நியமனம் சிபிஐ(எம்) அரசியல் பீரோ உறுப்பினர்களான எம்.ஏ. பேபி மற்றும் ஏ விஜயராகவனை புறக்கணித்தது.
எம்.வி. கோவிந்தன் ஒரு காலத்தில் உடற்கல்வி ஆசிரியராக இருந்ததால் ‘மாஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறார். கண்ணூரில், கோவிந்தன் முழுநேர அரசியக்கு வருவதற்கு விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பல ஆண்டுகளாக சிவப்பு தொண்டர் படைக்கு தலைமை தாங்கினார். இருப்பினும், அவர் சிபிஐ(எம்) தொண்டர்களுக்கு ஆசிரியராக இருக்கிறார். கட்சி வகுப்பறைகளில் மார்க்சியத்தை கற்பிக்கிறார். தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள இ.எம்.எஸ் அகாடமியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். இது 2001 ஆம் ஆண்டு சிபிஐ(எம்) மாநிலக் குழுவால் நிறுவப்பட்டது.
கடந்த ஆண்டு, கோவிந்தன் கூறிய இயங்கியல் பொருள்முதல்வாத மார்க்சியக் கோட்பாட்டு விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் இயங்கியல் பொருள்முதல்வாதம் நடைமுறையில் இல்லை. ஏனெனில், பெரும்பான்மையான மக்களின் மனநிலை இன்னும் நிலப்பிரபுத்துவ மனநிலையிலேயே உள்ளது; சமூகம் பொருள்முதல்வாதத்தை ஏற்க கூடத் தயாராக இல்லை என்று சி.பி.எம் தலைவர் கோவிந்தன் கூறினார்.
கோவிந்தன் நெருக்கடிகளை சமாளிக்கும் திறமைக்கு பெயர் பெற்றவர். 2012 ஆம் ஆண்டில், சி.பி.ஐ (எம்) எர்ணாகுளம் மாவட்டக் குழு கோஷ்டி பூசல் மற்றும் ஊழல்களில் சிக்கியபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சி.பி.எம் கேரள மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் கண்ணூரில் உள்ள மொராசா கிராமத்தில் பிறந்தவர். இந்த கிராமம் வடக்கு கேரளாவில் விவசாய இயக்கம் மற்றும் 1940-களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் தளமாக இருந்தது.
சிறுவர்களுக்கான சி.பி.எம் கட்சி அணியான பாலசங்கம் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்த கோவிந்தன், 1980 ஆம் ஆண்டு தேசிய அளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் கேரள மாநில இளைஞர் சங்கம் மாவட்டத் தலைவராக இருந்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயத்தக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அவர், பின்னர், இளைஞர் அமைப்பின் முதல் மாநிலத் தலைவராகவும் ஆனார்.
சி.பி.எம் கட்சி வகுப்பறைகள், ஊடகங்கள், விவசாயிகள் இயக்கம் எனப் பல்வேறு பாத்திரங்களில் பணியாற்றிய கோவிந்தன் சி.பி.எம் கட்சி அணிகளில் இருந்து எழுந்து வந்தவர். 1982ல், அப்போது கண்ணூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த காசர்கோடில் சி.பி.எம் வட்டாரச் செயலாளராக ஆனார். 2002 இல், அக்கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆனார். மாவட்டச் செயலாளராக அவர் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். சி.பி.எம் பத்திரிகையான தேசாபிமானியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள கோவிந்தன், 2018 ஆம் ஆண்டு சி.பி.எம்-ன் மத்தியக் குழு உறுப்பினரானார்.
அவர்களின் உரிமைக்காக போராடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது, கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கமான கேரள மாநில கர்ஷக தொழிலாளி சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”