Remya Haridas : காங்கிரஸ் பெண் வேட்பாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான விஜயராகவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், ஆலத்துார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ரம்யா ஹரிதாஸ். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
ரம்யாவின் பெற்றோர், கூலித்தொழிலாளிகள். ஏழ்மையிலும், பள்ளிகல்லுாரி வாழ்க்கையில் கலைத்துறையில் முத்திரை பதித்த ரம்யா, ராகுல் காந்தியால் அடையாள காணப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் நேற்றைய தினம், கோழிக்கோடு காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான விஜயராகவன் மீது புகார் ஒன்றை பதிவு செய்தார். அந்த புகாரில் தன்னை பற்றி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் கருத்து கூறிய விஜயராகவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தினசரி கூலித்தொழிலாளிகளின் மகளாக பிறந்து கடுமையான போராட்டங்களுக்கு பிறகு இந்த இடத்தை அடைந்துள்ள தன்னை பற்றியும் தனது வாழ்க்கை பற்றியும் விஜயராகவன் விமர்சித்திருப்பது கண்டிக்க தக்கது. அரசியலில் பெண் வேட்பாளர்கள் நிற்பதை இப்படியா விமர்சிப்பது? இந்த கருத்தை அவர் தெரியாமல் பகிரவில்லை.நன்கு தெளிவாக திட்டமிட்டே கூறியிருக்கிறார். என்னை போன்று வேறு எந்த பெண்ணும் இதுப்போன்ற விமர்சனத்தை எதிர்காலத்தில் சந்திக்க கூடாது விஜயராகவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் “என்று தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் விஜயராகவன், ரம்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து கேரளாவில் விஜயராகவனுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் விஜயராகன் இதுக் குறித்து விளக்கம் அளித்து மன்னிபும் கேட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “ யார் மனதையும் புண்படுத்தும் நோக்கிலும், யாரை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ரம்யா ஹரிதாஸை நான் புண்படுத்தியதாக அவர் நினைத்தால் நான் அதற்கு மன்னிப்பு கேட்க தயார். ஆனால் அது என் நோக்கம் அல்ல. பொதுவாழ்வில் பெண்கள் அதிகம் ஈடுப்படுவதை நான் எப்போதும் வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.