முத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ், கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் கைதாகும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் சொல்லி இஸ்லாமிய பெண்களை உடனடியாக விவாகரத்து செய்யும் நிகழ்வை தடுக்கும் பொருட்டு, மத்திய அரசு முத்தலாக் தடுப்பு சட்டம் இயற்றியது. ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றநிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கும் வந்தது. இந்த சட்டத்தின் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பான நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கேரளாவின் சுள்ளிக்காபரம்பு பகுதியை சேர்ந்த ஏக் ஹூசம் என்பவருக்கும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் நிக்காஹ் நடைபெற்றது. இதனிடையே, ஹூசம், தன்னை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாகவும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோர்ட் படியேறினார். தாமரசேரி மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், முக்கம் போலீசார் ஹூசமை கைது செய்தனர்.
முத்தலாக் தடுப்பு மசோதா ஜூலை 30ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சட்டமாக அமல் ஆனது. முத்தலாக் என்ற சொல்லை, வார்த்தையாகவோ, எழுதியோ அல்லது மின்னணு தகவல் சாதனங்களின் மூலம் அனுப்பி விவாகரத்து கோரினால், புதிய சட்டத்தின்படி, கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.