Kerala Flood IMD gives red alert to Malappuram, Wayanad districts : இந்த வருடம் என்னதான் பருவமழை மிகவும் தாமதமாக ஆரம்பித்தாலும், கடந்த 10 நாட்களில் அசுரத்தனம் காட்டிவிட்டது. இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்களில் எதையுமே விட்டுவைக்கவில்லை. கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்ட்ரா என அனைத்து பகுதிகளிலும் வெள்ளத்தில் தான் தத்தளித்து வருகிறது.
கேரளாவின் மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் அனைவரும் இடர்பாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். 92 பேர் இந்த இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 40 பேரின் நிலை என்ன ஆனது என்று இன்னும் தெரியாத நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மிகக்கனமழை பெய்யும் என்றும், இன்னும் 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்
வயநாட்டின் புதுமலை பகுதியில் 7 பேர் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மலப்புரத்தின் கவலப்பாரா பகுதியில் 30 பேரின் நிலை குறித்து ஒது வரை தகவல்கள் வெளியாகவில்லை. 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 59க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை மையம் 59 பேர் இவ்வெள்ளத்தினால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் “அரசால் இயன்ற வரை, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரித கதியில் செய்து முடிப்போம்” என்று கூறியுள்ளார்.