கேரளாவை வரலாறு காணாத வகையில் புரட்டிப் போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக தணிய தொடங்கியது.முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு வருகின்றன.
கேரளா கண்ட துயரம் :
இந்த வருடம் கேரளாவில் பெய்த தென்மேற்கு மழையானதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 78 நாட்கள் நீடித்த இந்த மழைக்காலத்தில் 65 நாட்கள் கேரளாவில் மழை கொட்டித்தீர்த்தது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் சராசரி மழைப் பொழிவினை விட 9 மடங்காக மழை பெய்திருக்கிறது கேரளாவில்.
ஆகஸ்ட் 16ம் தேதி பெய்த மழை, பல வருடக்கணக்கெடுப்பிலும் இல்லாத அளவிற்கு மழைப் பொழிவினை கொடுத்த நாளாகும்.
இம்மழையில் பெரும் அளவு பாதிப்பினை சந்தித்த மாவட்டங்கள் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு, மற்றும் மலப்புரம் ஆகும். ஆனாலும் தொடர்ந்து நிரம்பிய அணைகள் மற்றும் அதன் உபரிநீர் வெளியீட்டால் மட்டும் 14 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
42% சராசரி மழைப்பொழிவினைவிட அதிக மழைப்பொழிவை பெற்றது கேரளா. ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரையில் மட்டும் கொல்லம் மாவட்டம் 527 மிமீ மழைப்பொழிவை பெற்றுள்ளது. இடுக்கியில் 438 மிமீ மழை பொழிந்துள்ளது. மலப்புரம் 399 மிமீ மழை பொழிந்துள்ளது.
கேரளாவில் பெய்து வந்த பேய் மழையும், பெருவெள்ளமும், நிலச்சரிவும் அந்த மாநிலத்தை உருக்குலைந்து போக வைத்து விட்டது. வெள்ளத்தால் 231 பேர் பலியாகினர்; 32 பேர் காணாமல் போயினர்; 3 ஆயிரத்து 879 நிவாரண முகாம்களில் 3 லட்சத்து 91 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 14½ லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர்.
வெள்ளத்தால் நிலைக்குலைந்த வீடுகள்
இப்போது மழை நின்று, வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளது. மாநிலத்தில் இயல்புநிலை கொஞ்சம், கொஞ்சமாக திரும்பி வருகிறது. முகாம்களில் தங்கி இருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். தடைபட்டு போன மின்சார இணைப்புகள், தொலைதொடர்பு வசதிகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஊழியர்கள் முழு வீச்சில் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கும், வீடுகளுக்கு திரும்பி இருப்பவர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களை பாராட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.