தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் தற்போது கேரள ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர். கடந்த மாதம் ஏப்ரல் 7-ம் தேதி ஆளுநர் சதாசிவம் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் கார் டீசல் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது, வெள்ளியம்பலம்-கவுதியார் பகுதிச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி ஆளுநரின் அதிகாரப்பூர்வ கார் அதிவேகமாகச் சென்றதை சாலையில் பொருத்தப்பட்டிருந்த வேகக் கண்காணிப்பு கேமிரா பதிவு செய்தது. இதனால், போக்குவரத்துப் போலீஸார் ஆளுநர் சதாசிவம் சென்ற கார் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ரூ.400 அபராதம் விதித்தனர். அதற்குரிய ரசீதையும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆளுநர் சதாசிவமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர், அந்த காரில் தான் செல்லவிட்டாலும் கூட, தான் பயன்படுத்தும் கார் விதிமுறைகளை மீறி, அதிகவேகமாகச் சென்றது தவறு என்றும், விதிமுறைகளை மீறுவோர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் சட்டத்தை பின்பற்ற நாம் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். எனவே போக்குவரத்து போலீஸார் விதித்த 400 ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆளுநர். அதன்படி அபராத பணத்தை செலுத்தியதாகவும் ஆளுநர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.