குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கேரள அரசின் நிலைப்பாடு தொடர்பாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முஹம்மது கான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இது அவரது தனிப்பட்ட போராட்டம் அல்ல. ஆனால், அரசியலமைப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், தனக்கு தகவல் தெரிவிக்காமல் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததற்காக மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளார்.
இது குறித்து கேரள ஆளுநர் ஆரீஃப் முஹம்மது கான், “அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும். இது தனிப்பட்ட சண்டை அல்ல” என்று கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதிலிருந்து அம்மாநில இடது முன்னணி அரசுடன் முரண்பட்ட கான், தான் ஒரு மௌனமான பார்வையாளராக இருக்க மாட்டார் என்றும் நாட்டின் சட்டத்தை நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்துவார் என்றும் கூறினார்.
கடந்த வாரம், சிபிஐ (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசு 131 வது பிரிவின் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், அரசியலமைப்பு சட்டம் ஆர்ட்டிகிள் 14 (சட்டத்தின் முன் சமத்துவம்), 21 (உயிர் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்) மற்றும் அரசியலமைப்பின் 25 (மனசாட்சியின் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான தொழில், நடைமுறை மற்றும் மதத்தைப் பரப்புதல்) ஆகியவற்றை குடியுரிமை திருத்தச் சட்டம் மீறுகிறது என்றும் இந்த சட்டத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரியது.
புதிய குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கேரள சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கேரளா மட்டுமல்லாமல், பஞ்சாப் சட்டமன்றம் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பாஜக அல்லாத பிற மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அதை செயல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளன.