கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாட்டின்கராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், 2022 ஆம் ஆண்டில் ஷரோன் ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Found guilty of poisoning boyfriend Sharon Raj, Kerala woman Greeshma handed death sentence
கன்னியாகுமரியில் வசிக்கும் கிரீஷ்மாவும், திருவனந்தபுரத்தில் உள்ள பரஸ்லாவைச் சேர்ந்த ஷரோனும் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு கிரீஷ்மாவுக்கும், ராணுவ அதிகாரி ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த கிரீஷ்மா, தனது காதலன் ஷரோனை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதற்கான வழிமுறைகளை இணையத்தில் தேடிய கிரீஷ்மா, அதற்கான விஷத்தை ஷரோன் அருந்தும் தண்ணீர் மற்றும் கூல்ட்ரிங்கில் கலந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் ஷரோனுக்கு பாதிப்பு ஏற்படாததால், பழச்சாறில் விஷம் கலந்து அவருக்கு கொடுத்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
குறிப்பாக, அக்டோபர் 14, 2022 அன்று, இராணுவ அதிகாரியை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஷரோனை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு ஒரு மருத்துவ ஆயுர்வேத பானத்தை கிரீஷ்மா வழங்கினார். அதில் அவர் களைக்கொல்லியை கலந்து கொடுத்தார் என்று கண்டறியப்பட்டது.
ஆயுர்வேத கலவை பொதுவாக கசப்பான சுவையுடன் இருப்பதால், ஷரோன் அசாதாரணமான எதையும் கவனிக்கவில்லை. இருப்பினும், கிரீஷ்மாவின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவர் அன்றிரவு பலமுறை வாந்தி எடுத்தார், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்டோபர் 25 அன்று, 23 வயதான ஷரோன் பல உடல் உறுப்புகள் செயலிழந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார். தான் இறப்பதற்கு முன், கிரீஷ்மாவால் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவர் சந்தேகம் அடைந்தார். மேலும், கிரீஷ்மா தன்னை ஏமாற்றியதாக ஒரு நண்பரிடம் கூறினார். ஷரோன் உயிரிழந்த பிறகு அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
கிரீஷ்மா, அக்டோபர் 31 அன்று கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, செப்டம்பர் 2023 இல் ஜாமின் பெற்றார். கிரீஷ்மாவின் தாயும், மாமாவும் குற்றத்திற்கு தூண்டியது மற்றும் ஆதாரங்களை அழித்ததாக தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
IPC பிரிவுகள் 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 328 (விஷத்தால் காயப்படுத்துதல்), 302 (கொலை), 201 (ஆதாரங்களை அழித்தல் மற்றும் தவறான சாட்சியம் அளித்தல்), 203 (தவறான தகவல் அளித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் விசாரணையின் போது, ஷரோனுடனான தனது உறவை முறித்துக் கொள்ள தான் விரும்பியதாக கிரீஷ்மா தெரிவித்தார். மேலும், தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காண்பித்து ஷரோன் மிரட்டக் கூடும் என்ற அச்சத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கிரீஷ்மா தெரிவித்துள்ளார்.