திருமணமான அடுத்த நாளே கொலை செய்யப்பட்ட மருமகன்... பெண் வீட்டார் நடத்திய ஆணவக் கொலையா?

கேரளா மாநிலத்தில், காதல் திருமணத்திற்கு பிறகு தலித் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் வீட்டாருக்குப் பங்கிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கேரளா கோட்டையம் பகுதியில், இளைஞர் கெவின் ஜோசப் மற்றும் பி.காம் பட்டதாரியான 20 வயது நீணு சக்கோ காதல் திருமணம் செய்துகொண்டனர். கெவின் தலித் சமூகத்தைச் சேர்ந்ததாலும், பொருளாதார செல்வாக்கு இல்லாத காரணத்தாலும், நீணுவின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மே 24ம் தேதி இருவரும் எட்டுமன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்தச் சம்பவத்திற்கு பின்னர் பெண் குடும்பத்தாரின் மிரட்டல்களால், நீணுவை ஹாஸ்டல் ஒன்றில் சேர்த்துவிட்டு, தனது உறவினர்கள் இல்லத்திற்குச் சென்றார் கெவின். அன்று இரவே பெண் வீட்டாரின் உறவினர்கள், கெவின் மற்றும் அவரது உறவினர் ஒருவரைத் தர தரவென இழுத்து வந்து காரில் கடத்திச் சென்றது. கடத்திச் சென்ற சில மணி நேரங்களிலேயே கெவினின் உறவினரை அவர்கள் விடுவித்தனர். ஆனால் அவர்களிடம் சிக்கிக்கொண்ட கெவின் மறுநாள் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து விசாரணை நடந்ததில், “கெவின் குடும்பத்தினர் ஏழை என்பதால் எங்களில் காதலை என் பெற்றோர்கள் ஏற்கவில்லை. கெவின் மரணத்திற்குப் போடப்பட்ட திட்டம் எனது பெற்றோருக்கு தெரிந்து தான் நடந்துள்ளது. அவர்களே வந்து என்னை அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன். என் கணவன் கெவின் குடும்பத்தினருடன் தான் வாழ்வேன்.” என்று கதறி அழுதார் நீணு.

மேலும் கெவின் மாயமான இரவு முழுவதும் அவரது தந்தை அப்பகுதி காவல் நிலையத்தில் காவலர்களிடம் வழக்குப் பதிவு செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தார். ஆனால், அவரின் புகாரை ஏற்க மறுத்த காவலர்கள், கேரள முதல்வர் பினரய் விஜயன் அப்பகுதிக்கு வருவதால் அந்த வேலையில் பிஸியாக உள்ளதாக கூறினார்கள். இரவு முழுவதும் புகார் அளிக்க முடியாமல் தவித்து வந்த தந்தைக்கு, மகனின் மரணச் செய்தியுடனேயே காலைப் பொழுது விடிந்தது.

கெவின் கடத்தல் புகாரை ஏற்க மறுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது கேரள அரசு. மேலும் தலித் இளைஞர் கொலை வழக்கில், 4 அணிகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் இளம் ஜோடியின் காதலை கடுமையாக மறுத்த பெண்ணின் அண்ணன் ஷானு இக்கொலையைச் செய்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது ஷானு தலைமறைவாகி உள்ளதால், அவரைத் தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தப் புகாரை வழக்காகப் பதிவு செய்யாமல் இருக்க உதவி காவலர் பெண் வீட்டாரிடம் லஞ்சம் பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.

இளைஞர் கொலை வழக்கில், DYFI-ஐ சேர்ந்தோர் பெண் வீட்டாருக்குக் கடத்தல் மற்றும் கொலையில் உதவி செய்ததாக கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களில் 3 பேரைக் கைது செய்துள்ள போலீசார் முக்கிய குற்றவாளியான அண்ணன் ஷானுவை தேடி வருகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட DYFI, தலித் இளைஞரின் ஆணவக் கொலைக்கு உதவியாக இருந்த நியாஸ் மற்றும் நீணுவின் உறவினர்கள் அனைவரையும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

இரண்டு வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டதற்கு தலித் இளைஞரை ஆணவக் கொலை செய்த நீணு குடும்பம் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளது. சமூக ஆர்வலர்கள் பலர் கேரளாவில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close