சபரிமலை யாத்ரீகர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லும் ‘இருமுடிகட்டு’வில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேரளாவின் ஐந்து தேவஸ்வம் வாரியங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
சபரிமலை யாத்ரீகர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லும் ‘இருமுடிகட்டு’வில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேரளாவில் மிகப்பெரிய கோயில்களைக் நிர்வகிக்கும் திருவிதாங்கூர், கொச்சி, மலபார், குருவாயூர் மற்றும் கூடல்மணிக்யம் தேவஸ்வம் வாரியங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பூசாரிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ‘இருமுடிக்கட்டுவில்’ சேர்க்காதபடி தேவஸ்வம் வாரியங்கள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட கோயில்களுக்கு தகுந்த வழிமுறைகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. பிரசாதங்களில் பிளாஸ்டிக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக் விசாரணை மேற்கொண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்த ஆண்டு, சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திற்கு இதே போன்ற வழிமுறைகளை அது வெளியிட்டது.
சபரிமலை கோயில் இந்த ஆண்டு நவம்பர் 16 ம் தேதி மாலை ‘மண்டல-மகரவிளக்கு’ திருவிழாவிற்கு திறக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு கருவறை மூன்று நாட்களுக்கு மூடப்படும். டிசம்பர் 30 அன்று மீண்டும் திறக்கப்படுகிறது. ‘மகரவிளக்கு’ திருவிழா ஜனவரி 15 அன்று வருகிறது.
பெரியாறு புலிகள் காட்டில் உள்ளே ஒரு மலையின் மேல் அமைந்துள்ள சபரிமலை சன்னதி பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, மாநில நிர்வாகமும் காவல்துறையும் அங்கே சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நடைமுறைப்படுத்தி வருகிறது.