பெண்களின் அரை நிர்வாண உடலை ஆபாசமாக பார்க்கக்கூடாது என்றும் பெண்களின் நிர்வாண உடல், பாலியல் உணர்வை தூண்டும் ஒன்றாக கருத முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா ( வயது33) , தனது இரண்டு குழந்தைகளும், அவர் உடலின் மேல்பகுதியில் ஓவியம் வரைவதுபோன்ற வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். 2020ம் ஆண்டு அந்த வீடியோ பகிரப்பட்டது. இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் நிலவியது. இவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொச்சி காவல்துறை இவர் மீது போக்சோ சட்டம், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் கவுசர் எடப்பகத் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். ’ பெண்களின் அரை நிர்வாண உடலை ஆபாசமாக பார்க்க கூடாது. பெண்களின் நிர்வாண உடல், பாலியல் உணர்வை தூண்டுவதாக கருதப்படுவது தவறு என்று” அவர் கூறினார்.
”சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் சில மக்களின் மனம் பாதிக்கப்படுவதால், ஒருவரை நாம் குற்றம்சாட்ட முடியாது. சமூக கட்டமைப்பில் தவறு என்று கருதப்படுவது, சட்டரீதியாக தவறாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்றும் அவர் கூறினார்.
” சிக்ஸ் பாக் மற்றும் ஆண்களின் மேல் பகுதி உடலை எல்லோரும் எளிதாக கடந்து சென்றுவிடுகின்றனர். அது ஒரு விவாதமாக மாறுவதில்லை. இதுபோலத்தானே பெண்களின் மேல் பகுதி உடலை பார்க்க வேண்டும். சமூகத்தில் நிலவும் இந்த இரட்டை மனநிலையை கேள்வி கேட்கும் நோக்கத்தில்தான், சமந்தபட்ட பெண் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“