கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள செயின்ட் தாமஸ் சென்ட்ரல் எனும் சிபிஎஸ்இ பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து மாணவர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி பள்ளியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதே விழாவில் பாடிய உடன் படிக்கும் மாணவியை அவர், அனைவரது முன்பும் கட்டிப் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த ஆசிரியை ஒருவர், இருவரையும் உடனடியாக பள்ளியின் துணை தலைமை ஆசிரியையிடம் கொண்டுச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கின்றனர். அப்போது, விளக்கம் அளித்த அந்த மாணவன், அப்பெண் சிறப்பாக பாடியதற்காகத் தான், அவரை பாராட்டும் நோக்கில் கட்டிப் பிடித்தேன் என கூறியிருக்கிறார்.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு இருவரது புகைப்படங்கள் சில, அந்த மாணவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, இருவரையும் சஸ்பென்ட் செய்த பள்ளி நிர்வாகம், செப்டம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை மட்டும் எழுத அனுமதித்திருக்கிறது.
இந்நிலையில், அந்த மாணவன் குழந்தைகள் உரிமை கமிஷனை நாட, இருவரின் சஸ்பென்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க உத்தரவிட்டது.
ஆனால், இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளி நிர்வாகம் எடுத்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கை சரியானது தான் என்று கூறி, இருவரின் சஸ்பென்ட்டை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.