ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது போன் ஹேக் செய்யப்பட்டதாகவும், இந்து மற்றும் முஸ்லிம் அதிகாரிகளுக்கான இரண்டு தனித்தனி குழுக்கள் உட்பட பல புதிய வாட்ஸ்அப் குழுக்களின் அட்மின் ஆக்கப்பட்டதாகவும் புகார் அளித்ததையடுத்து திருவனந்தபுரம் நகர போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: WhatsApp groups for bureaucrats ‘on basis of religion’: Kerala IAS officer says phone hacked, files police complaint
இந்த புகார் அளித்தவர், ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன், கேரளாவில் தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக உள்ளார். தனது போன் ஹேக் செய்யப்பட்ட பிறகு "மல்லு இந்து அதிகாரிகள்" மற்றும் "மல்லு முஸ்லிம் அதிகாரிகள்" என்ற இரண்டு வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"மல்லு இந்து அதிகாரிகள்" குழு அக்டோபர் 30 ஆம் தேதி உருவாக்கப்பட்டது, அதில் இந்துக்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை உறுப்பினர்களாக சேர்த்தனர். இருப்பினும், பல அதிகாரிகள் அத்தகைய குழுவின் முறையற்ற தன்மையைக் சுட்டிக்காட்டியதால், அந்தக் குழு உருவாக்கப்பட்ட சில மணிநேரங்களில் நீக்கப்பட்டது.
அப்போது கோபாலகிருஷ்ணன் தனது போனை யாரோ தனது கட்டுப்பாட்டில் எடுத்து 11 குழுக்களை உருவாக்கிவிட்டதாக குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த கோபாலகிருஷ்ணன், “என்னை அட்மினாகக் கொண்டு ‘மல்லு முஸ்லிம் அதிகாரிகள்’ என்ற மற்றொரு குழுவும் உருவாக்கப்பட்டது. சக ஊழியர்கள் என்னை எச்சரித்த பிறகு, எல்லா குழுக்களையும் நீக்கிவிட்டேன்.” என்று கூறினார்.
திங்கள்கிழமை அவர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் கூறுகையில், “இன்று அந்த அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. குழுக்கள் நீக்கப்பட்டதால், வாட்ஸ்அப்பில் விவரங்களைக் கேட்டுள்ளோம். அப்போதுதான் இந்த குழுக்கள் போனை ஹேக் செய்து உருவாக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.
இந்த வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கியது தொடர்பாக அரசின் பொது நிர்வாகத் துறை, இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி. ராஜீவ் கூறுகையில், “இந்த விவகாரத்தை அரசு பரிசீலிக்கும். மதத்தின் அடிப்படையில் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தால், அது பெரிய தவறான செயல். விசாரணை முடியட்டும்” என்றார்.
விசாரணை முடிவதற்குள் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதுபோன்ற குழுக்களை உருவாக்குவது அரசுக்கு அவமானம் என எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறினார். “ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காவல்துறைக்குள் ஊடுருவியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆன்னி ராஜா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இப்போது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே இந்துக் குழுக்களைப் பார்க்கிறோம். அதிதீவிர சக்திகள் அதிகாரிகள் மட்டத்தில் ஊடுருவியுள்ளன. மாநில அரசு சும்மா உட்கார்ந்திருக்கிறதா?” என்று கேட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“