இந்தியச் சமூகம் இன்னும் ஆண் - பெண் காதலுக்கு சாதி, மதம், அந்தஸ்து என்று எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகமாகத்தான் இருக்கிறது. இன்னும் மூன்றாம் பாலினத்தவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இப்போதுதான், மூன்றாம் பாலினத்தவர் மீதான பார்வையும் அவர்களைப் புரிந்துகொள்கிற நகர்வுகளும் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், இன்னும் எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) சமூகங்களைப் பற்றிய தெளிவான அறிவியல் பூர்வமான, சக மனிதர்களின் மீதான அன்புடன் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியச் சமூகம் இன்னும் ஆண் - பெண் உறவை சிக்கலாகப் புரிந்துகொண்டிருக்கும் சூழலில், எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினர் தங்கள் உறவை வெளிப்படையாக வைக்கத் தயங்கி வருகிறார்கள். அரிதாகவே சிலர் தங்கள் உறவை சமூகத்துக்கு பகிரங்கப்படுத்தி வருகிறார்கள். அதற்கு நீண்ட போராட்ட குணம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
அந்த வகையில், கேரளாவில் ஒரு லெஸ்பியன் ஜோடி நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, நீதிமன்ற அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டு சேர்ந்திருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த லெஸ்பியன் ஜோடி நஸ்ரின் - நூரா திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் கழுத்தில் மாலையுடன் அன்பைப் பகிர்ந்துகொள்ளும் படங்களுக்கு பலரும் லைக் செய்து வருகின்றனர்.
யார் இந்த நஸ்ரின் - நூரா?
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவருடைய தோழி பாத்திமா நூரா. இருவருடைய பெற்றோரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தனர்.
ஆதிலா நஸ்ரின் சவூதி அரேபியாவில் 11-ம் வகுப்பு படிக்கும்போது நூராவை சந்திதுள்ளார். இருவருக்கும் இடையே தொடங்கிய நட்பு தீவிரமடைந்து பின்னர் காதலாக மாறியது. இருவரும் தனியாக தங்கி இருந்தபோது தொடர்பு ஏற்பட்டு லெஸ்பியன் உறவாக மாறியது.
ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவருக்கும் இடையேயான லெஸ்பியன் உறவு பற்றி தெரிந்துகொண்ட உறவினர்கள் பாத்திமா நூராவை நஸ்ரினுக்கு தெரியாமல் சவூதி அரேபியாவில் இருந்து கேரளாவுக்கு அனுப்பி விட்டனர்.
இதை அறிந்த ஆதிலா நஸ்ரின், சவூதி அரேபியாவில் இருந்து தனது தோழியைத் தேடி கேரளாவுக்கு வந்தார். இங்கே பாத்திமா நூராவைத் தேடிக் கண்டுபிடித்தார். மீண்டும் இணைந்த இந்த ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி தனியாக தங்கி இருந்தனர்.
இது பாத்திமா நூராவின் உறவினர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த பாத்திமா நூராவின் உறவினர்கள் நூராவை வலுக்கட்டாயமாக பிரித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
பாத்திமா நூராவை வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்ற உறவினர்கள், அதற்கு பிறகு அவரை சந்திக்க ஆதிலா நஸ்ரினை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், பாத்திமா நூராவின் பெற்றோர், தங்கள் மகளை ஆதிலா நஸ்ரின் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், அசராத ஆதிலா நஸ்ரின், தனது தோழியை அவருடைய உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். மேலும், தங்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாகவும் நாங்கள் இருவரும் 18 வயது பூர்த்தியானவர்கள் அதனால், எங்களுடைய விருப்பப்படி சேர்ந்து வாழ நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆதிலா நஸ்ரின் மற்றும் அவரது தோழி பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது. மேலும், அவர்களுக்கு உறவினர்கள் இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.
ஆதிலா நஸ்ரின் - பாத்திமா நூரா இருவரும் நீண்ட காதல் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். நஸ்ரினும் நூராவும் திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளதை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், உறவினர், சமூகம் எவர் எதிர்த்தாலும், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, நீதிமன்ற அனுமதியுடன் லெஸ்பியன் ஜோடி இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.