/indian-express-tamil/media/media_files/2025/05/26/fBavBjGBoBLa0fQEpw2F.jpg)
கேரள கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய எம்.எஸ்.சி எல்சா 3 (MSC ELSA 3) சரக்குக் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. இன்று (மே 26) கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் நான்கு கடலோரப் பகுதிகளில் இந்த கண்டெய்னர்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகையப் பொருட்களிலிருந்து மக்கள் குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, கப்பலில் 640 கண்டெய்னர்கள் இருந்ததாகவும், அவற்றில் 13 "அபாயகரமான சரக்குகளையும்" 12 கால்சியம் கார்பைடையும் கொண்டிருந்ததாகவும் கடலோர காவல்படை தெரிவித்திருந்தது. மேலும், கப்பலின் டேங்குகளில் 84.44 மெட்ரிக் டன் டீசலும், 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் ஆயிலும் இருந்தன.
இதையடுத்து, மூழ்கிய கப்பலில் இருந்து வரும் கண்டெய்னர்கள் பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களுடன் மத்திய மற்றும் தெற்கு கேரளக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதால், மாநில அரசு கடற்கரையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தவிர, கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கேரளக் கடற்கரையின் எந்தப் பகுதியையும் அடையலாம் என்பதால், அது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் (INCOIS), கசிந்த எண்ணெய்யின் மாசு வெளியான 36-48 மணி நேரத்திற்குள் ஆலப்புழா, அம்பலப்புழா, ஆற்றுப்புழா மற்றும் கருநாகப்பள்ளி ஆகிய கடலோரப் பகுதிகளை அடையலாம் என்று கூறியிருந்தது. "இந்தக் கடலோரப் பகுதிகள் மாசுபடும் அபாயத்தில் உள்ளன. சாத்தியமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் அது குறிப்பிட்டது.
கரைக்கு ஒதுங்கிய கண்டெய்னட்களுக்கு அருகில் செல்பவர்களுக்கு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. சில கண்டெய்னர்களில் அபாயகரமான பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதால், மக்கள் அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதனுள் என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த சுங்கத்துறை அவற்றை ஆய்வு செய்யும்.
தெற்கு மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் (RRTs), வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறைக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், எண்ணெய் கசிவு கரைக்கு வரும் பட்சத்தில், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெற்கு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும், வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.