கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவின் போர் முன்னெடுப்புகள் மந்தமான நிலையில் உள்ளது.
இந்த சூழலில், ரஷ்ய ராணுவ முகாமில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஷெல் குண்டு தாக்குதலில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Kerala man working at Russian military camp killed in shell attack
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருக்கூர் பஞ்சாயத்தில் இருக்கும் நாயரங்காடியை சேர்ந்தவர் சந்தீப். 36 வயதான இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சந்தீப் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவில் இருக்கும் ஒரு உணவகத்தில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, திருச்சூரைச் சேர்ந்த ஒருவர் ஷெல் குண்டு தாக்குதலில் இறந்துவிட்டதாக ரஷ்ய மலையாளி சங்கத்திலிருந்து எங்களுக்குச் செய்தி வந்தது. பாதிக்கப்பட்டவர், செய்தியின்படி, ரஷ்ய ராணுவ கேண்டீனில் பணிபுரிந்துள்ளார். இறந்த அந்த நபரை அடையாளம் காண மலையாளிகள் சங்கத்தினர் விரும்பினர். பின்னர், விவரங்களை சரிபார்த்தோம், அது சந்தீப் என்பதை கண்டுபிடித்தோம், ”என்று சந்தீப்பின் உறவினர் சரண் கூறினார்.
சந்தீப் ரஷ்யா சென்ற பிறகு தொடர்பில் இருந்த நிலையில், சமீபத்தில் தான் அவருடனான தொடர்பை இழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். "அவர் மாஸ்கோவில் வேலை செய்வதாகவும், ஒரு மாத சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பியதாகவும் எங்களிடம் கூறினார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் குடும்பத்தை அரிதாகவே தொடர்பு கொண்டார். அவர் மாஸ்கோவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் படைகளின் தாக்குதலுக்கு ஆளான ராணுவ கேண்டீனில் அவர் இருந்ததை பின்னர் நாங்கள் அறிந்தோம்” என்று சரண் கூறினார்.
சந்தீப்புக்கு திருமணமாகவில்லை, அவரது தந்தை சந்திரன் மற்றும் தாய் வல்சலா ஆகியோர் உள்ளனர். அவரது பெற்றோர் இருவரும் விவசாயம் செய்து வருகிறாரார்கள். ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தலையீட்டிற்காக அவரது உடலைக் கொண்டு வர குடும்பத்தினர் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“