Advertisment

கேரளாவில் மனைவியை கொன்று நாடகம்; கணவன் கைதுடன் முடிந்த நீதிக்கான 17 வருட போராட்டம்

கேரளாவில் மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்; அவரது கைதுடன் முடிந்த நீதிக்கான 17 வருட போராட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala murder

ஜனார்த்தனன் நாயர் மற்றும் மனைவி ரமாதேவி

Shaju Philip

Advertisment

மே 26, 2006 அன்று, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புல்லாட் கிராமத்தில் 50 வயதான ரமாதேவி தனது வீட்டிற்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசாருக்கு ஒருவர் மீது சந்தேகம் இருந்தது, ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு இழுபறியில் இருந்த நிலையில், ரமாதேவியின் கணவர் ஜனார்த்தனன் நாயர் 2007-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு விசாரணை கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், இந்த கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்: மார்பில் புல்லட், முகத்தில் ஆசிட்… ராஜஸ்தானை உலுக்கும் தலித் இளம்பெண் படுகொலை!

சில மாதங்களுக்கு முன்பு வரை, காவல்துறையினரும், புல்லாட் கிராமத்தில் வசிப்பவர்களும் இந்தக் குற்றத்தை தமிழகத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி செய்ததாக நம்பினர். ஏனெனில் அந்த தொழிலாளி சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் அந்த பகுதியில் வேலை செய்ய அருகில் உள்ள ஒரு வீட்டில் குடியேறி, கொலை நடந்த பிறகு காணாமல் போனார். சம்பவத்தின் போது 26 வயதுடைய தொழிலாளியை கடந்த 17 வருடங்களாக போலீசார் தேடி வந்தனர்.

75 வயதான தபால் துறையின் ஓய்வுபெற்ற ஊழியர் ஜனார்த்தனனை கைது செய்ய போலீசாருக்கு உதவியது, அவரது வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் பல ஆண்டுகளாக ஆராயப்படாமல் இருந்த சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்களின் ஆய்வு ஆகியவையே.

போலீசாரின் கூற்றுப்படி, தொடர்ச்சியான தடயவியல் பரிசோதனைகளுக்குப் பிறகு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கை முட்டியில் காணப்பட்ட முடிகள் அவரது கணவருக்கு சொந்தமானது என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியும், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருமான சுனில் ராஜ் கூறுகையில், ஜனார்த்தனன் தனது மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்டதால் கொலையை செய்ததாக கூறப்படுகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

2006 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மாலையில் இந்தக் கொலை நடந்தது. அப்போது ஆலப்புழா மாவட்டம் செங்கனூரில் தபால் துறையின் மூத்த கணக்காளராக இருந்த ஜனார்த்தனன், அவர்களது வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் ரமாதேவி பிணமாக கிடந்ததைக் கண்டதாக போலீஸாரிடம் கூறினார். ரமாதேவி அணிந்திருந்த சில ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன என்றும் ஜனார்த்தனன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், அக்கம்பக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கொலை நடந்த அன்று ரமாதேவியின் வீட்டின் அருகே 26 வயது சந்தேக நபரை பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். அந்த நபர் அப்போது வீட்டின் அருகே உள்ள கட்டுமான தளத்தில் வேலை செய்து வந்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியுடன் சம்பவ நடந்த இடத்திற்கு அருகே வேலை செய்ய வந்து வாடகை வீட்டில் குடியேறிய அந்த தொழிலாளி, சந்தேகத்தின் ஊசி அவர் மீது விழுந்ததை அறிந்தவுடன் மனைவியுடன் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

கொலை நடந்த ஒரு மாதத்திற்குள், ரமாதேவிக்கு நீதி கிடைக்க, உள்ளூர்வாசிகள் நடவடிக்கைக் குழுவை அமைத்ததாக, புல்லாட் விழும் கோயிபுரம் பஞ்சாயத்து உறுப்பினர் பி.உண்ணிகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். அவர்கள் கொலையாளியை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.

“இருப்பினும், உள்ளூர் போராட்டம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஏனெனில் கொலையைச் செய்தது 26 வயது இளைஞன்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். போராட்டத்தை தொடர்வதில் எந்த பயனும் இல்லை” என்று நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் கூறினார். எவ்வாறாயினும், காவல்துறை விசாரணையை விரைவுபடுத்துமாறு அந்தக் குழு அப்போதைய முதல்வர் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடம் மனு அளித்தது.

இந்த வழக்கில் பொது ஆர்வம் குறையத் தொடங்கியபோதும், புல்லாட் கிராமத்தில் ஜனார்த்தனனின் மனைவி கொலையில் சந்தேகம் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன.

காவல்துறையின் செயலற்ற தன்மைக்கு எதிரான போராட்டங்களில் ஆர்வம் காட்டாத ஜனார்த்தனன், விசாரணையை கேரள காவல்துறையின் குற்றப்பிரிவின் சிறப்புக் குழுவிடம் ஒப்படைக்கக் கோரி 2007 இல் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணைக்கு பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் சுனில் ராஜ் கூறுகையில், ”கிரைம் த்ரில்லர் படங்களைப் பார்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் யோசனை ஜனார்த்தனனுக்கு வந்தது. அவர் பேசாமலும் செயல்படாமலும் இருந்தால் மற்றவர்கள் தன்னை சந்தேகிப்பார்கள் என்று நினைத்தார். அவர் சந்தேகத்தை திசை திருப்ப நினைத்தார். அந்தத் திட்டத்தில் இருந்துதான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகப்படும்படியான கொலைகாரனாக தமிழ் தொழிலாளியை முன்னிறுத்தவே அவர் விரும்பினார்,” என்று கூறினார்.

கடந்த ஜூலை மாதம் முதல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். “குற்றவாளிகளைத் தேடி எங்கள் குழுக்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்றன. 2006 ஆம் ஆண்டு கொலைக்கு பின் தமிழ் தம்பதியினரின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை அவர்களது வாடகை வீட்டில் இருந்து போலீசார் சேகரித்தனர். இந்த தம்பதியினர் வசித்த வாடகை வீட்டின் உரிமையாளரிடம் இருந்து, அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வேறு பகுதியில் தங்கியிருப்பது எங்களுக்கு தெரியவந்தது," என்று இன்ஸ்பெக்டர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி தமிழகத்தின் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் என்று தகவல் கிடைத்ததும், போலீஸ் குழுக்கள் அவரைக் கண்டுபிடித்தனர்.

ஆனால், அது விசாரணையை முன்னோக்கி கொண்டு செல்லவில்லை. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த அந்த நபர் தனது மனைவியைக் கைவிட்டுச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர் என்று சுனில் ராஜ் கூறினார். “அவர் வேறொரு ஆணுடன் வாழ்ந்து வந்தார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைக் கைவிட்டுவிட்டதாகவும், முன்னாள் கணவன் இருக்கும் இடம் தனக்குத் தெரியாது” என்றும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தேடுதல் தொடர்ந்தது, அவர் அங்கு வேலைக்குச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் வரை தேடுதல் நீட்டிக்கப்பட்டது என்று இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால், தேடுதல் பலனளிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கை முட்டியில் காணப்படும் முடியின் இழைகள் பற்றிய தடயவியல் அறிக்கையை புலனாய்வாளர்கள் மறுபரிசீலனை செய்தபோது திருப்புமுனை ஏற்பட்டது. கொலை நடந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் தடயவியல் அறிக்கை போலீசாருக்கு கிடைத்திருந்த போதிலும், பிரதான சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால், எந்தவொரு சந்தேக நபருடனும் முடியை பொருத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை.

இம்முறை, போலீசாருக்கு ஜனார்த்தனன் வழங்கிய வாக்குமூலங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஜனார்த்தனனை சந்தேகிக்கத் தொடங்கிய பின்னர், போலீசார் முடியை பொருத்தி பார்த்தனர்.

குற்றம் நடந்த இடத்திற்கு முதலில் சென்றவர் தான் என்றும், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கொலையாளி வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அந்த பூட்டை உள்பக்கம் பூட்டியதாகவும் ஜனார்த்தனன் போலீசாரிடம் கூறியுள்ளார். ஜனார்த்தனன் தான் கதவுக்கு மேலே உள்ள லேட்டிஸ் அமைப்பு வழியாக கதவைத் திறந்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வீடு இடிக்கப்பட்டாலும், கதவின் மறுபக்கத்தில் உள்ள தாழ்ப்பாளை ஜனார்த்தனனால் நெருங்க முடியுமா என்பதை சரிபார்க்க, கதவு மற்றும் மேல்நிலை லேட்டிஸை மீண்டும் உருவாக்க அவரது குழு முடிவு செய்ததாக இன்ஸ்பெக்டர் ராஜ் கூறினார். அவர்கள் 2006 இல் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களைப் பயன்படுத்தி கட்டமைப்பை மீண்டும் உருவாக்கினர். "ஜனார்த்தனனின் கூற்று தவறானது என்று சோதனை நிரூபித்தது, மேலும் இது ஆய்வை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது," என்று அவர் கூறினார்.

ரமாதேவியின் கொலை ஒரு திட்டமிட்ட செயல் என்று இன்ஸ்பெக்டர் நம்பவில்லை, ஒருவேளை அவர்களது சண்டையின் போது நடந்திருக்கலாம், இது ஒரு வழக்கமான நிகழ்வு என்று அவர் கூறினார்.

“அன்று, ஜனார்த்தனன் ரமாதேவியின் தலைமுடியைப் பிடித்துக் கொண்டார், ரமாதேவியும் ஜனார்த்தனனின் முடியைப் பிடித்துக் கொண்டார். அவர் வெட்டப்பட்டபோது, ​​கைமுட்டியில் முடி இழைகளுடன் விழுந்துள்ளார், இது கணவருக்கு எதிரான உறுதியான ஆதாரமாக மாறியது,” என்று இன்ஸ்பெக்டர் ராஜ் கூறினார்.

ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டிருப்பது கிராமவாசிகளில் பெரும்பாலோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை, ஏனெனில் அவருக்கு கொலையில் பங்கு இருக்கலாம் என்று பலர் சந்தேகித்தார்கள் என்று செயல் குழு ஒருங்கிணைப்பாளர் உன்னிகிருஷ்ணன் கூறினார்.

ஜனார்த்தனன் ஒரு நாள் பிடிபடுவோம் என்று முதலில் பயந்தார், ஆனால் இவ்வளவு காலத்திற்குப் பிறகு அது நடக்கும் என்று அவர் நினைக்கவில்லை என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment