Shaju Philip
மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்க கூடியது என்று தொடர்ந்து பாஜக நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்க, கேரள சட்டமன்றத்தின் ஒரே ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ. ராஜகோபாலும் வியாழக்கிழமை கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தார்.
இருப்பினும் சில மணி நேரங்கள் கழித்து ராஜகோபால் வெளியிட்ட அறிக்கையில், அவர் தீர்மானத்திற்கு எதிராக பேசியதாகவும், சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் எதிர்தரப்பு வாக்குகளை கருத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம் சட்டினார்.
நேற்று காலையில் ராஜகோபால் மூன்று சட்டங்களுக்கும் ஆதரவாக சட்டமன்றத்தில் பேசினார். ஆனால் ஓட்டாக முன்வைக்க சபாநாயகர் கேட்டுக் கொண்ட போது ராஜகோபால் தீர்மானத்திற்கு ஆதரவை அளித்தார்.
சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், எனக்கு தீர்மானத்தின் சில பகுதிகளில் எதிர்ப்பு இருந்தது. இருப்பினும், மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நான் ஆதரிக்கின்றேன். அதனால் தான் அதற்கு எதிராக என்னால் வாக்களிக்க இயலவில்லை என்று கூறினார்.
அவர் ஏன் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்று கேட்ட போது, அது ஜனநாயக உத்வேகம். நான் பொதுமக்களின் ஒருமித்த கருத்தினை ஏற்றுக் கொள்கின்றேன். இது போன்ற சில விசயங்களில் சமரசம் தேவை. பாஜக சட்டமன்ற உறுப்பினர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று கூறினார் அவர்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் சுரேந்திரனிடம் கேள்வி எழுப்பிய போது அவர் அறிக்கை குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றார். ஆனால் மதியம் ராஜகோபால் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சபாநாயகர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக கூறினார். மேலும் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என்று தனித்தனியாக எண்ணிக்கை நடத்தப்படவில்லை என்றார். தீர்மானம் குறித்து என்னுடைய உரையிலேயே நான் விவரித்துவிட்டேன். நான் எந்த சட்டத்தையும் எதிர்க்கவில்லை. நான் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிரானவரும் அல்ல என்றார்.
2016ம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கான வழியை கேரளத்தில் உருவாக்கினார் ராஜகோபால். முன்பும் பாஜகவின் நிலைப்பாட்டில் இருந்து பல்வேறு முறை வேறுபட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிராக இருந்த போது பாஜக தலைவர் சுரேந்திரன் எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃபின் க்ராஸ் வோட்டிங் பாஜகவின் தோல்விக்கு வழி வகுத்தது என்றார். ஆனால் ராஜகோபாலான் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாங்கள் மக்களின் நம்பிக்கையை பெறவில்லை. கட்சி தங்க கடத்தல் வழக்கினை மட்டும் வைத்துக் கொண்டு அரசை குற்றம் சுமத்தியது. அது முறையாக செயல்படவில்லை. அவர்கள் அரசின் திட்டங்களால் அடைய இருக்கும் நன்மைகள் குறித்து மட்டுமே அக்கறை செலுத்துகிறார்களே தவிர அவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அல்ல என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள அரசு குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போதும் ராஜகோபால் அதனை எதிர்க்கவில்லை.