கேரளாவில் ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET) தேர்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவர், தேர்வறைக்குள் நுழைவதற்கு முன்பு, தன்னையும் மற்ற மாணவிகளையும் உள்ளாடைகளை கழற்றச் சொன்னதாக காவல்துறையில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார்.
கொல்லம், ஆயூரில் உள்ள மார்தோமா தகவல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தேர்வெழுதிய சிறுமி, தேசிய தேர்வு முகமையால் நிர்ணயம் செய்யப்பட்ட ஆடைக் குறியீட்டை மீறி, மேலும் பல மாணவிகளை உள்ளாடைகளை அகற்ற வற்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். நீட் தேர்வில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை.
இது குறித்து கொல்லம் ஊரக காவல் கண்காணிப்பாளர் கே.பி.ரவி கூறுகையில், “ஒரு மாணவியின் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து வழக்கு பதிவு செய்ய போலீஸ் குழு அங்கு சென்றுள்ளது. மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகே, சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை கூற முடியும்” என்று கூறினார்.
அந்த கல்லூரியின் செய்தித் தொடர்பாளர், தேர்வர்களை சோதனையிடுவதற்கு ஒப்படைக்கப்பட்ட ஏஜென்சியின் ஊழியர்களே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். “எங்கள் மையத்தில் 520 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவிருந்தனர். நாங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கினோம். எங்கள் பணியாளர்கள் கண்காணிப்பாளர்களாக இருந்தனர். இரண்டு ஏஜென்சிகளைச் சேர்ந்த நான்கு பேர், மாணவர்களை சோதனையிடுவதற்காகவும், மற்றொருவர் அவர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவுக்காகவும் இருந்தனர். அவர்களை சோதனையிட தனி பகுதிகள் கொடுக்கப்பட்டன. நிறுவனமோ அல்லது எங்கள் ஊழியர்களோ சோதனைச் செயல்பாட்டில் ஈடுபடவில்லை. திங்கட்கிழமைதான் இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது” என்று கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சிறுமியின் தந்தை காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது மகள் உள்ளாடைகளை கழற்ற மறுத்ததால், தேர்வு அறைக்குள் உட்கார வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளார். “இது என் மகளின் வழக்கு மட்டுமல்ல. மேலும் பலர் இதே நிலையை எதிர்கொண்டனர். இதனால், அந்த அறையில் இன்னும் பலர் அழுது கொண்டிருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “முரட்டுத்தனமான நடத்தை காரணமாக குழந்தைகள் மனரீதியான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக புகார்தாரர் கூறினார். “பல மாணவர்கள் கொக்கிகளை அகற்றிக்கொண்டிருந்தனர். இந்த மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்களால் நம்பிக்கையுடன் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. கோவிட் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உள்ளாடைகள் ஒரு சேமிப்பு அறையில் ஒன்றாக வைக்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் உள்ளாடைகளை கழற்ற முதலில் மறுத்தபோது, அவர்களின் எதிர்காலம் முக்கியமா அல்லது உள்ளாடைகள் முக்கியமா என்ற கேள்வியை எதிர்கொண்டனர்” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கேரள உயர்கல்வி அமைச்சர் டாக்டர் ஆர் பிந்து வருத்தம் தெரிவித்துள்ளார். “ஏஜென்சி மற்றும் அதன் ஊழியர்களின் தரப்பில் ஒரு கடுமையான குறைபாடு உள்ளது (இது சிறுமிகளை சோதனை செய்தது). சிறுமிகளின் அடிப்படை மனித உரிமைகளை கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு தனது அதிருப்தியை மத்திய அரசு மற்றும் தேசியத் தேர்வு முகமைக்கு எடுத்துச் செல்லும்” என்று அமைச்சர் ஆர் பிந்து கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.