கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பிராங்கோ முல்லகலுக்கு எதிராக சாட்சி சொன்ன,மற்றொரு பாதிரியார் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு:
கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் 28ம் தேதி ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மீது அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார், பிஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து அவரிடம் நேரடியாக விசாரித்து வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பிராங்கோ தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி அளித்திருந்த வாக்குமூலம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.பிராங்கோவை கைது செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்திலும் ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிராங்கோ முல்லகலு
இத்தனை போராட்டங்களுக்கு பின்பு அவரை பேராயர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக வாடிகன் அறிவிப்பு வெளியிட்டது.அதன் பின்பு பிராங்கோவிடம் கேரளா காவல்துறையின் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
பிராங்கோ முல்லகல்:
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிராங்கோவிற்கு ஜாமின் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளாவுக்குள் நுழைய கூடாது, வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கூடாது என கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதனால், ஜாமீனில் வெளிவந்த பிராங்கோ நேராக தனது சொந்த ஊருக்கு சென்றார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பிராங்கோவிற்கு எதிராக சாட்சி அளித்தவர்களில் முக்கியமானவர் பாதிரியார் குரியகோஸ்.
ஜலந்தர் மறைமாவட்ட திருச்சபையின் கீழ் பணியாற்றி வந்த அவர், கன்னியாஸ்திரி பிராங்கோவிற்கு எதிராக புகார் அளித்த போது, காவல்துறையினரிடம் நேரடியாக தனது தரப்பு வாக்கு மூலத்தை அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை போக்பூரில் உள்ள தனது வீட்டில் பாதிரியார் குரியகோஸ் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் மரணம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குரியகோஸின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக குரியகோஸ் தொடர்ந்து கூறி வந்திருந்தார்.
இந்நிலையில் பிராங்கோ ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலியே, பாதிரியார் குரியகோஸ் மரணம் அடைந்திருப்பது இந்த வழக்கில் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை பாதிரியார் குரியகோஸின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.