எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 10 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குவைத் வளைகுடா வங்கி கேரளாவில் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலோர் செவிலியர்கள் குவைத்தில் இருந்த போது அங்கு வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா வங்கியின் துணை பொது மேலாளர் முகமது அப்துல் வஸ்ஸி கம்ரானின் புகார்களின் அடிப்படையில் கடந்த மாதம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வளைகுடா வங்கிக்கு உதவியாக கேரளாவில் இருந்து வழக்கறிஞர் தாமஸ்.ஜே அனக்கல்லுங்கல் உதவுகிறார். அவர் கூறுகையில், 1,400 பேர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர்களில் பெரும்பாலோர் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள். அவர்கள் குவைத் நாட்டில் பணிபுரிந்த போது சம்பள சான்றிதழை வைத்து கடன் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
கடன் செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் புகார்கள் பதிவு செய்யப்படும் என்றும் வழக்கறிஞர் கூறினார்.
"இதுவரை, புகார்கள் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடன் செலுத்தத் தவறியவர்களுக்கான இந்த மோசடி வழக்குகள் சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்படுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
கடன் பெற்றவர்கள் கடன் பெறுவதற்கு போலியான ஆவணங்களைத் தயாரித்திருந்தால் மட்டுமே ஏமாற்றுதல் மற்றும் குற்றச் சதி ஆகிவற்றில் வரும். கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் சட்டப்பூர்வமான ஆய்வுக்கு வழக்கு உட்படுத்தப்படும்" என்று வழக்கை நன்கு அறிந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
யுனைடெட் செவிலியர் சங்கத்தின் தலைவர் ஜாஸ்மின் ஷா கூறுகையில், பெரும்பாலான செவிலியர்கள் தங்கள் ஆட்சேர்ப்பு செலவுகளை செலுத்த கடன் பெற்றுள்ளனர் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“