கேரள மாநிலம் பாலக்காட்டில் கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நடந்து சென்ற 4 பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கரிம்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளான இர்ஃபானா, ஆயிஷா, ரீதா, மித்தா ஆகியோர் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக இன்று மாலை 4 மணி அளவில் கோழிக்கோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சிமெண்ட் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மாணவிகள் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிமெண்ட் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பள்ளி மாணவிகள் நால்வர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்துக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு செய்யும் என உறுதி அளித்துள்ளார். மேலும் விபத்து தொடர்பாக நியாயமான முறையில் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“