கேரளாவில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர், ஒரு கும்பல் தன்னை தாக்கிவிட்டு முதுகில் பி.எஃப்.ஐ என்று எழுதிவிட்டு கட்டிப்போட்டு சென்றதாக புகார் அளித்த நிலையில், அவர் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக புகார் அளித்திருப்பது கண்டறியப்பட்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: Soldier, friend arrested for faking ‘PFI’ assault: Kerala Police
கடந்த ஆண்டு இந்திய அரசால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்கிற பி.எஃப்.ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒரு கும்பல் தன்னை தாக்கிவிட்டு முதுகில் பச்சை பெயிண்ட்டில் பி.எஃப்.ஐ என்று எழுதிவிட்டு கட்டிப் பேக்கேஜிங் டேப்பால் கட்டிப்போட்டு விட்டு சென்றதாக 35 வயதான ஷைன்குமார் அளித்த புகாரின் பேரில், கேரள போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் காவல் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில், ராணுவ வீரர் ஷைன்குமார், தன்னை 6 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டதாக புகார் அளித்தது, தவறான புகார் என்பதை கண்டறிந்தனர். பின்னர், பொய் புகார் அளித்த ராணுவ வீரரும் அவருடைய நண்பரும் போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், விசாரணையில் அந்த நபரின் குற்றச்சாட்டுகள் பொய்யானது என கண்டறியப்பட்டது.
விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஷைன்குமார், பிரபலமாவதற்காக பொய் வழக்கைப் புனைந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். போலீஸாரின் கருத்துபடி, ஜோஷி என அடையாளம் காணப்பட்ட ராணுவ வீரரின் நண்பர் ஜோஷி தாங்கள் தவறாக புகார் அளித்ததாக ஒப்புக்கொண்டார்.
ஷைன்குமார், ஜோஷி ஆகிய இருவரையும் கடக்கால் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திப்படி, ஜோஷியின் வீட்டில் இருந்த பச்சை வண்ண பெயிண்ட், ஒரு பிரஷ் மற்றும் நாடாவை போலீசார் கைப்பற்றினர். பச்சை பெயிண்ட், பிரஷ், நாடா ஆகியவை அவர்கள் கூறிய சம்பவத்தை ஜோடிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷைன்குமார் முதலில் அளித்த புகாரின்படி, கடக்கால் காவல் எல்லைக்குட்பட்ட சனாபாரா கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, போதையில் இருந்த நபர் ஒருவர் தோட்டத்தில் படுத்திருப்பதாகவும், உதவி தேவைப்படுவதாகவும் பொய்யான சாக்குப்போக்கு கூறி 2 பேர் அவரை அருகிலுள்ள ரப்பர் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றதாகவு, தோட்டத்தில் 6 பேர் கொண்ட கும்பல் தன்னைத் தாக்கியதாகவும், அப்போது அவர்கள் தனது சட்டையைக் கிழித்து, முதுகில் பி.எஃப்.ஐ என்று எழுதி, பேக்கேஜிங் டேப்பால் கைகளைக் கட்டியதாகவும் ஷைன்குமார் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“