கேரளாவின் 2002 முதல் 14 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட ஆறு மரணங்கள் குறித்து கேரள காவல்துறை விசாரித்து வருகிறது. அனைத்து இறப்புகளிலும் சில பொதுவான விஷயங்களை வைத்தே கொலைக்கான கோணம் விசாரிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை, கோழிக்கோடு கிராமப்புற மாவட்டத்தில் உள்ள இரண்டு தேவாலய கல்லறைகளில் ஆறு உடல்களையும் தடயவியல் பரிசோதனைக்காக போலீசார் தோண்டி எடுத்தனர்.
காவல்துறையினரின் தகவல் படி, ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியரான பொன்னமட்டம் அன்னம்மா (57) முதன்முதலில் கோடெஞ்சரியில் கடந்த 2002ல் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். உணவு சாப்பிட்டவுடன் அவர் உயிரிழந்தார். 2008 ஆம் ஆண்டில், மாநில கல்வித் துறையில் பணிபுரிந்த அவரது கணவர் டாம் தாமஸ் (66) உணவு சாப்பிட்டவுடன் இறந்தார். இவர்களது மகன் ராய் தாமஸ் (40) 2011 ல் அரிசி சாப்பிட்டு இறந்தார். அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ (68) 2014ல் இறந்தார். அதன் பிறகு நெருங்கிய உறவினர் சிலி மற்றும் அவரது இரண்டு வயது மகள் 2016 இல் இறந்தனர்.
மறைந்த தம்பதியரின் மகனுடைய புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியது. அமெரிக்காவில் வசிக்கும் மகன் ரோஜோவுக்கு அவரது சகோதரர் ராய் இறந்ததைத் தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டது.
கோழிக்கோடு ஊரக எஸ்.பி. கே ஜி சைமன் கூறுகையில், "ஆறு பேரும் உணவு எடுத்துக் கொண்டு இறந்தனர். ஆறு இறப்புகளில், பிரேத பரிசோதனை 2011ல் இறந்த ராய் வழக்கில் மட்டுமே நடைபெற்றது. பிரேத பரிசோதனை அவரது உடலில் விஷம் இருப்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும், ராய் தற்கொலை செய்து கொண்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் குடும்பத்தினர் அதை பெரிதுப்படுத்தவில்லை. இப்போது, அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.
ரோஜோ தனது பெற்றோரின் சொத்துகளை மோசடி செய்து அவர்களிடமிருந்து பறித்ததாகவும், அவர் மீதே சந்தேகம் இருப்பதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.