பாலக்காடு மாவட்டம் அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவை சேர்ந்த யானை ஒன்று உணவு தேடி கிராமம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது. கர்ப்பிணியான அந்த யானை, வெடிபொருட்கள் நிரம்பிய அன்னாசி பழத்தை உட்கொண்டுள்ளது. அந்த பழங்கள், யானையின் வாயில் வெடித்து நாக்கு மற்றும் வாய் பகுதிகளில் பெரும் சேதத்தை உருவாக்கின. இந்த பழங்களை யானைக்கு தந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயத்திற்கு இதமாக இருக்கும் என்று நினைத்த யானையோ, நேரடியாக அருகில் இருக்கும் ஆற்றில் இறங்கியுள்ளது. தண்ணீருக்குள் இருந்தால் வேதனை குறைவாக இருக்கும் என்று நினைத்த யானை நிறைய தண்ணீரையும் அருந்தியுள்ளது. ஆனால் காயத்தில் தண்ணீர் படவும் வாய்பகுதி சீல் பிடித்துவிட்டது. அந்த யானையால் மேற்கொண்டு உணவு எதையுமே உண்ண முடியாமல் பசியால் வாடியிருக்கிறது அந்த கர்ப்பிணி யானை.
விவரம் அறிந்த காவல்துறையினர் கும்கி யானைகளுடன் வந்து யானையை மீட்டனர். ஆனால் அந்த யானை உயிரிழந்துவிட்டது. அந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் பசி, மயக்கம், காயம் காரணமாக மயங்கி விழுந்த யானை நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளது என்று முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆனால் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பழங்களை தின்றதால் தான் காயம் ஏற்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. இந்த யானையின் மரணத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வெளியாகின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“