கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் எல்லப்புள்ளி கிராமத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் மனைவியுடன் சென்றுகொண்டிருந்த போது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், பலமாக தாக்கிவிட்டு ஓடியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் இதுவரை காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.
பாஜகவின் கேரள பிரிவு, இந்தக் கொலைக்கு பின்னால் இந்திய சமூக ஜனநாயக கட்சி(SDPI) மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) கட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை எஸ்டிபிஐ கட்சி மறுத்துள்ளது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் கேரள பாஜக பிரிவு வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து பேசிய மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன், " இவ்வழக்கில் என்ஐஏ விசாரணை நடத்துவது தொடர்பாக, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளேன். கேரளாவில் சிபிஐ(எம்)-எஸ்டிபிஐ கூட்டணிக்கு எதிராக போராட்டங்களை நடத்துவோம்.
கடந்த 5 ஆண்டுகளில், 10 ஆர்எஸ்எஸ்-பாஜக தொண்டர்கள், இந்த குழுவினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கு பின்னால் உள்ள மர்மத்தை காவல் துறையினர் கண்டறிய வேண்டும்.
சஞ்சித் கொலை வழக்கில், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். ஆளும் சிபிஐ(எம்) மற்றும் எஸ்பிடிஐ இடையேயான தொடர்பு காரணமாக, போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். அரசியல் கொலைக்கு எஸ்டிபிஐயை சிபிஐ கட்சி பயன்படுத்தி வருகிறது.
சஞ்சித் கடந்த காலங்களில் பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். ஆனால் அவரது உயிரைப் பாதுகாக்க காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் கொலை" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil