/tamil-ie/media/media_files/uploads/2018/02/a280.jpg)
கேரள சட்டப்பேரவை சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ரூ.50,000க்கு அரசு செலவில் மூக்கு கண்ணாடி வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவ செலவுக்காக ரூ.4.25 லட்சம் அரசு செலவிலிருந்து சபாநாயகர் வாங்கியதும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. நேற்று முன்தினம் கேரள சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், செலவீனங்களில் சிக்கனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்நிலையில், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அரசு செலவில் ரூ.50,000க்கு மூக்கு கண்ணாடி வாங்கியது, வழக்கறிஞர் டி.பி.பினு என்பவர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ-க்கு கேரள சட்டப்பேரவை அளித்த பதில் மனுவில் தெரியவந்துள்ளது. இதில், லென்ஸ் ரூ.45,000 எனவும், கண்ணாடி ஃபிரேம் ரூ.4,900 எனவும் ஆர்டிஐ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.50,000க்கு ரசீது கொடுத்து மூக்கு கண்ணாடி வாங்கிய சர்ச்சையில் சிக்கியதோடு மட்டுமல்லாமல், 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில், மருத்துவ செலவுக்கான ரசீது கொடுத்து அரசிடமிருந்து ரூ4.25 லட்சம் பெற்றதும் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, மருத்துவரின் அறிவுரைப்படி தான் மூக்குக் கண்ணாடி வாங்கியதாக ஸ்ரீராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான கட்டணங்களும் உண்மையானவை என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, அம்மாநில சுகாதார துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா ரூ.28,000க்கு அரசு செலவில் மூக்கு கண்ணாடி வாங்கியதாகவும், தன் கணவர் மருத்துவ செலவுக்காக ரூ.93,000 வாங்கியதாகவும் ஆர்.டி.ஐ பதிலில் தெரியவந்தது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக, பாஜகவினர் அளித்த புகாரின்பேரில், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.