கேரளாவில் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஆங்கில உரையை குறைபாடற்ற முறையில் தெளிவாக மலையாளத்தில் மொழிபெயர்த்ததற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார்.
வயநாடு மாவட்டம் வதூரில் உள்ள கருவர்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் லேப் ஒன்றை திறந்து வைக்கச் சென்றிருந்தார் அத்தொகுதியின் எம்.பி ராகுல் காந்தி. பள்ளி விழாவில் உரையாற்றத் தொடங்கும் போது தனது உரையை பள்ளி மாணவர்களில் யாராவது ஒருவர் மொழிபெயர்க்க விரும்பினால் முன்வரலாம் என அழைத்தார்.
11-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவி சஃபா செபின் தன்னார்வத்துடன் மொழிப்பெயர்க்க முன்வந்தார். ராகுல் காந்தியின் கேரளப் பயணங்களின் போது வழக்கமாக மொழிபெயர்க்கும் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான கே.சி.வேணுகோபால் சிரித்துக்கொண்டே அதே மேடையில் அமர்ந்திருந்தார். மேடை ஏறிய மாணவி சஃபா ராகுலுக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் பதில் வணக்கம் தெரிவித்தார்.
தனது சக பள்ளி மாணவர்கள் உற்சாகப்படுத்த மிகவும் சிறப்பான முறையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்தார் அம்மாணவி. உரையின் இறுதியில் மாணவி சஃபா-வை சிறப்பான மொழிபெயர்ப்புக்காகப் பாராட்டினார் ராகுல் காந்தி. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ராகுல் தனது உரையில், "நீங்கள் உண்மையிலேயே விஞ்ஞானியாக இருக்க ஒரே வழி மற்றவர்களின் யோசனைகளையும் கூர்ந்து கவனிப்பதே. வெறுப்பும் கோபமும் விஞ்ஞான இயற்கையின் மிகப்பெரிய அழிப்பான். ஒழுங்கீனம் இல்லாத மனதை உறுதிப்படுத்துவது அவசியம், அதாவது நீங்கள் மற்றவர்கள் பேசுவதையும் கவனமாகக் கேட்க வேண்டும். மற்றவர்களின் கருத்துக்கள், கலாச்சாரங்கள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றை நீங்கள் மதிக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தியின் உரையை தமிழில் காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தன் இஷ்டத்துக்கு மொழிப் பெயர்த்த வீடியோ வைரலான நிலையில், கேரளாவில் ராகுல் உரையாற்றிய போது பிஜே குரியன் என்ற மூத்த தலைவர் மொழிப் பெயர்ப்பு செய்த போது, ராகுலிடமே நீங்கள் என்ன பேசினீர்கள் என்று திரும்ப திரும்ப கேட்டது உச்சக்கட்ட காமெடியாகிப் போனது.
அதான் ராகுலே, மாணவர்களை மேடைக்கு அழைத்துவிட்டார் போல...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.