கேரளாவின் மலப்புரத்தில் உள்ள இந்து கோயில் ஒன்று, பிப்ரவரி 11 அன்று இரவு கோயில் அருகே வசிக்கும் இஸ்லாமிய சகோதரர் இறந்ததன் காரணமாக, திருவிழா காலத்தை குறைத்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
மலப்புரத்தில் உள்ள பீரஞ்சிரா கிராமத்தில் புன்னச்சேரி பகவதி கோயில் உள்ளது. இந்த மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் நிலையில், இந்து கோயிலின் ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது.
அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த 72 வயதான வசித்து வந்த செரட்டில் ஹைதர், வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
இதையடுத்து, கோயில் நிர்வாகிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமான, சனிக்கிழமை வரை நடைபெற இருந்த ஊர்வலம் மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடிவு செய்தனர். மாறாக, கோயிலுக்குள்ளேயே சிறிய அளவில் சடங்குகளை நடத்திக்கொண்டனர்.
கோயில் கமிட்டி துணைத் தலைவர் எம்.வி.வாசு கூறுகையில், "ஹைதர் எங்களுக்கும் கிராமத்தில் உள்ள இந்து சமூகத்திற்கும் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஒரு காலத்தில் மர வியாபாரியாக இருந்த அவர் கோயிலுக்கு எதிரில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில், ஹைதர் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கோயில் திருவிழா ஜோராக பல ஊர்வலங்கள் சென்றுக்கொண்டிருந்தன. உடனடியாக அனைத்தையும் ரத்து செய்துவிட்டோம்" என்றார்.
பஞ்சாயத்து உறுப்பினர் பி முஸ்தபா கூறுகையில், கோயிலின் இந்த முடிவு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஜனாஸாவின் (இறுதிச் சடங்கு) போது, இறந்தவர் மீது கோயில் நிர்வாகிகள், இந்து சமூகத்தின் மரியாதை செலுத்தினர். கிராமத்தில் இருந்த மூத்தவர்களில் ஹைதர் ஒருவர்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil