பினராயி விஜயன் அறிவிப்பு
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு, பினராயி விஜயனின் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இத்தகைய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருநங்கைகள் உயர்கல்வி பயில்வதற்காக அனைத்துக் கல்லூரிகளிலும் அனைத்துப் பிரிவுகளிலும் கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்கி சமீபத்தில் கேரள அரசு அறிவித்தது. இதேபோல் கேரளாவின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் திருநங்கைகளுக்கென சிறப்பு பிரிவு தொடங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.