scorecardresearch

கேரளாவில் 40 மணி நேரத்துக்கும் மேலாக மலையிடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு!

மலம்புழாவைச் சேர்ந்த சேரட்டில் பாபு(23), என்ற இளைஞர், இரு நண்பர்களுடன் திங்கள்கிழமை 1,000 அடி உயரமுள்ள குரும்பாச்சி மலைக்கு மலையேறினார்.

kerala trekker rescued
kerala trekker rescued

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழாவில் மலைப்பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர் இன்று ராணுவத்தால் மீட்கப்பட்டார்.

மலம்புழாவைச் சேர்ந்த சேரட்டில் பாபு(23), என்ற இளைஞர், இரு நண்பர்களுடன் திங்கள்கிழமை 1,000 அடி உயரமுள்ள குரும்பாச்சி மலைக்கு மலையேறினார். பிறகு உச்சியில் இருந்து கீழே இறங்கும் போது, ​​சோர்வுற்ற இளைஞர், பாறையில் நழுவி விழுந்து அங்குள்ள அபாயகரமான மலையிடுக்கில் சிக்கிக்கொண்டார்.இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பீதியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் பலனில்லை.

எனவே அவர்கள் மீண்டும் மலம்புழாவுக்கு வந்து அதிகாரிகளின் உதவியை நாடினர். திங்கள்கிழமை இரவு, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தன்னார்வ உறுப்பினர்கள்’ செங்குத்தான மலையில் மலையேற முயன்றனர், ஆனால் அந்த இளைஞரை அடைய முடியவில்லை. அவர் தனது இருப்பிடத்தை வாட்ஸ்அப் மூலம் மீட்புக் குழுவிற்கு அனுப்பினார்.

நேற்று தொடர்ந்து 2வது நாளாக உள்ளூர் அதிகாரிகள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர், ஆனால் பாபுவை அணுக முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு பிரிவினருக்கும்’ நிலப்பரப்பு மிகவும் சவாலானதாக இருந்தது.

இளைஞரை மீட்கும் முயற்சியில் ராணுவம்

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் கடலோர காவல்படையின் உதவியை நாடியது. ஒரு சேடக் ஹெலிகாப்டர் அப்பகுதியில் பல முறை சென்றது, ஆனால் மோசமான வானிலை காரணமாக ஏர்லிஃப்ட் திட்டம் தோல்வியடைந்ததால் திரும்பியது.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், ராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை அரசு நாடியுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட பெங்களூருவில் இருந்து ராணுவ கமாண்டோக்கள் குழு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் தெற்குப் படையின் மலையேறும் நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் செவ்வாய்க்கிழமை இரவு மலம்புழாவுக்குச் சென்று மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.

இன்று அதிகாலை முதல், சிக்கிய இளைஞரை மீட்கும் பணியில் இரு ராணுவ குழுக்கள் ஈடுபட்டன. பெரும் முயற்சிக்கு பிறகு, ராணுவ மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒரு வீரர் பாபுவுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்தார்.

பிறகு, ஒரு பாதுகாப்பு கயிற்றின் உதவியுடன், பாபு மலம்புழாவில் உள்ள குரும்பாச்சி மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவரை விமானம் மூலம் தளத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்தன. தற்போதைய அறிக்கைகளின்படி, பாபுவின் உடல்நிலை நன்றாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ”மலம்புழாவில் சேரட் மலையில் சிக்கியிருந்த இளைஞன் மீட்கப்பட்டதால் கவலைகள் ஓய்ந்துள்ளன. அவரது உடல்நிலையை மீட்டெடுக்க தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்கப்படும். மீட்புப் பணியை முன்னெடுத்த ராணுவ வீரர்களுக்கும், உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி” என ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kerala trekker trapped on hill state seeks help from army force