/indian-express-tamil/media/media_files/2025/01/22/hkvXEX2JX50epNV7zP74.jpg)
கேரளாவில் ரூ.600 கோடி மதிப்பிலான டிஸ்டில்லரி ஆலையை அமைக்க சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் அரசாங்கத்தின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அதன் உரிமையாளருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்திட்டத்திலும் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Delhi liquor scam ‘link’ to Palakkad water crisis: Why Vijayan govt is drawing fire over a distillery
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் ஏற்கனவே வறண்டுவிட்ட நீர் மட்டத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக பாலக்காட்டில் முன்மொழியப்பட்ட மதுபான ஆலை குறித்தும் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த வாரம், பினராயி விஜயன் அமைச்சரவை, பாலக்காட்டின் காஞ்சிக்கோட்டில் எத்தனால் ஆலை, IMFL பாட்டில் ஆலை, மதுபானம், மால்ட் ஸ்பிரிட் ஆலை மற்றும் பிராந்தி/வைனரி ஆகியவற்றை அமைக்க ஒயாசிஸ் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் டெல்லி கலால் கொள்கை வழக்கில் முறைகேடுகள் தொடர்பாக ஒயாசிஸ் கமர்ஷியல் உரிமையாளரை அமலாக்கத் துறை கைது செய்ததாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகின்றன.
திங்களன்று, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் ஆலை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வினர் தனித்தனியாக அணிவகுத்துச் சென்றனர். ஏற்கனவே, அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த ஆலை அமைந்தால் நிலைமை மேலும் கவலைக்கிடமாகும் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு இதே இடத்தில் இருந்த பெப்சிகோ ஆலை, நீர் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பிரச்சனை காரணமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு பாலக்காட்டில் ஒரு கோக் குளிர்பான ஆலை மூடப்பட்டது.
நிதி பற்றாக்குறையில் இருக்கும் கேரள அரசுக்கு, வரி இல்லாத வருவாயாக மதுபான விற்பனை முக்கிய இடம் வகிக்கிறது. எனினும், கடந்த 25 ஆண்டுகளாக அம்மாநிலத்தில் மதுபான ஆலை/டிஸ்டில்லரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் BEVCO நிறுவனம், டிஸ்டில்லரிகளுக்கான தேவையை தற்போது பூர்த்தி செய்து வருகிறது.
எனினும், பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி, அதன் 2023 கலால் கொள்கையில், மது மற்றும் பீர் உள்ளிட்ட IMFL உற்பத்தியை மாநிலத்திலேயே ஊக்குவிக்க முடிவு செய்தது.
இந்த விவகாரம் குறித்து அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான வி. டி. சதீசன் கூறுகையில், "எந்த அடிப்படையில் ஒயாசிஸ் நிறுவனத்தை மாநில அரசு தேர்ந்தெடுத்தது என தெளிவுபடுத்த வேண்டும். மதுபான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அரசாங்கம் மீறியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்பட்டது? டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஒயாசிஸ் உரிமையாளர் கவுதம் மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். நீர் ஆதாரங்களை மாசுபடுத்தியதற்காக அந்நிறுவனம், பஞ்சாபில் வழக்குகளை எதிர்கொண்டது" எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என பாலக்காட்டைச் சேர்ந்த சி.பி.ஐ(எம்) தலைவரும், கலால் துறை அமைச்சருமான எம்.பி. ராஜேஷ் தெரிவித்துள்ளார். "சம்பந்தப்பட்ட அனைத்து காரணிகளையும் ஆராய்ந்த பின்னரே மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டம் முதலீடு சார்ந்தது. அதனால் டெண்டர் செயல்முறை தேவையில்லை. ஒயாசிஸ் நிறுவனம் எத்தனால் தயாரிப்பதற்காக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம். கேரளாவில் முதலீடு செய்வதை காங்கிரஸ் எதிர்க்கிறது. எங்கள் முடிவு வெளிப்படையானது" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "காங்கிரஸ் தலைவருக்கு இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எண்ணம் மிகவும் இயல்பானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மதுபான ஆலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர் சி. கிருஷ்ணகுமார் பேரணி ஒன்றை நடத்தினார். அதன்படி, "இந்த மதுபான ஆலை அமைக்கும் முடிவு, பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரை மூலப்பொருளாக பயன்படுத்தும் எந்த தொழிற்சாலையும் இங்கு அனுமதிக்கப்படக்கூடாது. குடிநீர் பாசனத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
திங்களன்று, காங்கிரஸ் ஆளும் எலப்புள்ளி பஞ்சாயத்தில், முன்மொழியப்பட்டுள்ள மதுபான ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதற்கு பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். "அரசு தங்கள் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும். எங்கள் பஞ்சாயத்தில் உள்ள புவியியல் தட்பவெப்பநிலை மற்றும் விவசாய நடைமுறைகளை கருத்திற்கொண்டு மதுபான ஆலைக்கு எதிராக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" எனக் கூறினார்.
இவை அனைத்தையும் புறந்தள்ளிய சி.பி.எம் அரசு, தங்கள் நடவடிக்கையை நியாப்படுத்துகின்றனர். மேலும், எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை அரசியல் ரீதியானது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
"இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது" என சி.பி.எம் மாநில செயலாளர் எம். வி. கோவிந்தன் குற்றம்சாட்டுகிறார். இதேபோல், சம்பந்தப்பட்ட இடத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலுவவுதாக கூறுவதையும் அவர் ஏற்க மறுத்துள்ளார். திட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஏக்கர் நிலத்தில் மழைநீர் சேகரிப்பு மூலம் சேகரிக்கப்படும் தண்ணீர் அதற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 3,000 மதுபான விநியோக அலகுகள் உள்ளன என்றும், கேரளாவில் 309 யூனிட்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, கேரளாவில் ஸ்பிரிட் உற்பத்தி அலகுகள் எதுவும் இல்லை. அதன் தேவை முற்றிலும் மற்ற மாநிலங்களில் உள்ள ஆலைகளில் இருந்து பூர்த்தி செய்யப்படுகிறது. கேரளாவில் மதுபாட்டில்கள் உற்பத்தி அலகுகள் மட்டுமே உள்ளது.
முதற்கட்டமாக, முன்மொழியப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக தானிய அடிப்படையிலான ஸ்பிரிட் உற்பத்தி அலகு ஒன்றை அமைக்க ஒயாசிஸ் திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
- ஷாஜு ஃபிலிப்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.