ஏ.ஆர். ரஹ்மானின் உள்ளத்தை கவர்ந்த வயலின் இசைக்கலைஞர் கார் விபத்தில் மரணம்

Kerala violinist and music composer balabhaskar passes away : அவரின் இரண்டு வயதுக் குழந்தையும் அந்த விபத்தில் பலி.

வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மரணம் : கேரளா மாநிலம் திருமலா பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தபால் அலுவல ஊழியர் சந்திரன் மற்றும் இசை ஆசிரியர் சாந்தக் குமாரி தம்பதிகளின் மகன் பாலபாஸ்கர் ஆவார்.

தன்னுடைய இசைக் குடும்பத்தின் ஆசிர்வாதங்களை முழுக்கப் பெற்றிருந்த பாலபாஸ்கர் ஒரு திறமை மிக்க வயலின் இசைக் கலைஞர். தன்னுடைய 17வது வயதில் முதல் படத்திற்கு இசை இசைக்கும் அளவிற்கு பேரும் புகழும் பெற்றிருந்தவர்.

திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ஏ.ஆர்.ரஹ்மான் பாலபாஸ்கரிடம் “உங்களை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் நிச்சயமாக பெரிய ஆளாகத் தான் இருக்க முடியும்” என்று கூறி அவரின் இசைத் திறமையை பாராட்டியிருக்கிறார்.

கார் விபத்தில் பலியான வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மகள்

அவரின் வயது நாற்பது. அவருடைய மனைவி லக்‌ஷ்மி (38), மகள் தேஜஸ்வினி (2) மற்றும் தன்னுடைய நண்பர் அர்ஜூன் (29) என நால்வரும் திருச்சூரில் இருக்கும் கோவில் ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் 25ம் தேதி இரவு அவர்கள் திருவனந்தபுரம் அருகே இருக்கும் பள்ளிபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அர்ஜூன் தூங்கிவிட்டதால் வண்டி நெடுஞ்சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.

வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி மரணம்

மோதிய அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே தேஜஸ்வினி உயிரிழந்துவிட்டார். பாலபாஸ்கர், லக்‌ஷ்மி, மற்றும் அர்ஜூன் ஆகிய மூவரையும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் இந்த விபத்தை நேரில் கண்ட பெட்ரோல் பேங்க் ஊழியர்கள். மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பாலபாஸ்கர். ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையாள திரை உலகத்தினர் அவரின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை பதிவு செய்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close