Shaju Philip
சனிக்கிழமையன்று, 47 வயது பெண்மணி ஒருவரை, தனது முதல் கணவர், அவரது பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை, 14 ஆண்டுகளில் சயனைடு மூலம் கொலை செய்த குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்தனர். குடும்பத்தின் சொத்தை கட்டுப்படுத்தவும், தனக்கு விருப்பமான ஒரு நபருடன் வாழவும் இந்த கொலைகளை அவர் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
"கடந்த வாரமே நாங்கள் ஒரு நாள் தியானத்திற்குப் சென்று வந்தோம். ஜாலி தனது வீட்டில் வழக்கமான பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்," என்று திருச்சபையில் ஜோலியின் பிரார்த்தனைக் குழுவின் உறுப்பினர் பி ஜார்ஜ் கூறுகிறார். அண்மையில் தனது முதல் கணவர் ராய் தாமஸின் மரணம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளது குறித்து ஜாலியுடன் பேசியதாக ஜார்ஜ் கூறுகிறார். அதற்கு ஜாலி, "கவலைப்பட ஒன்றுமில்லை" என்று கூறினார்.
ஜாலியின் இரண்டாவது கணவர் ஷாஜூ சக்கரியாஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். 2017ல் அவரை ஜாலி திருமணம் செய்து கொண்டார். "ராய் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அடிக்கடி சென்று, அவர்களின் கல்லறைகளில் பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றுவார்" என்று ஷாஜு கூறுகிறார். "அவர் எப்போதாவது ஒரு ஞாயிறு பிரார்த்தனையை தவறவிட்டால் அவளுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டுவிடும்." என்றும் ஷாஜூ கூறுகிறார்.
முதலில் இடுக்கியில் உள்ள கட்டப்பனாவைச் சேர்ந்த ஜாலி, டாம் மற்றும் அன்னம்மா தாமஸின் மூன்று பிள்ளைகளில் மூத்தவரான ராய் என்ற வர்த்தகரை, 1997ல் காதல் திருமணம் செய்து கொண்டார். டாம் கல்வித் துறை எழுத்தராக ஓய்வு பெற்றபோது, அன்னம்மா ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஜாலி மற்றும் ராய் ஆகியோருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர், இப்போது அவர்களுக்கு 15 மற்றும் 21 வயது.
காலிகட்டில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் விரிவுரையாளராக பணியாற்றியதாக ஜாலி எல்லோரிடமும் சொன்னதாக, அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஷாஹுல் ஹமீத் கூறுகிறார். "அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஜாலியைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தைக் கொண்டிருந்தார்கள்... ஆனால், அவர் ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்தவர் என்பது தான் எங்களுக்கு தெரிய வருகிறது." என்று ஹமீத் கூறினார்.
இருப்பினும், பெற்றோர் இறந்த பிறகு ஒரு சொத்து தகராறு ஏற்பட்டது என்பதை கிராமத்தார்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். 2002 ல் அன்னம்மா (57), 2008ல் டாம் (66) இறந்தனர். நெஞ்சுவலி வந்து அவர்கள் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இப்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒரு ஏக்கர் விவசாய நிலத்தையும், 40 சென்ட்டில் மற்றொரு நிலத்தையும், இரண்டு மாடி வீட்டையும் அவர்கள் விட்டுச் சென்றனர். அவர்கள் இறந்த பிறகு, ராய் ஒரு குடிகாரராக மாறி தனது நினைவை இழந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். 2011ல் ராய் இறந்த பிறகு, பிரேத பரிசோதனையில் அவரது மரணத்திற்குப் பின்னால் சயனைடு விஷம் இருப்பது தெரியவந்தது. வாந்தியெடுத்தல் மற்றும் வாயிலிருந்து நுரை தள்ளுதல் போன்றவற்றால் இது தற்கொலை வழக்கு என்று அனைவரும் நம்பினர்.
இறந்த நான்காவது நபர் அன்னம்மாவின் சகோதரர் எம் எம் மேத்யூ (68). ராய் மரணத்தில் சந்தேகப்பட்டு பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தியதே இவர் தான். ஆனால், அவரும் 2014 இல் இறந்தார்.
ராய் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, டாமின் சகோதரர் சகாரியா தாமஸின் மகன் ஷாஜூவை ஜாலி மணந்தார். அதற்குள், ஷாஜுவின் ஒரு வயது மகள் ஆல்பின் மற்றும் மனைவி சில்லி இருவரும் இறந்துவிட்டனர். இந்த மரணங்களிலும் ஜாலியின் மீது சந்தேகம் இருந்தது. 2014 இல் ஆல்பின் இறக்க, 2016ல் சில்லி இறந்தார்.
ஜாலி தனது மகன்களுடன் வீட்டில் தொடர்ந்து தங்கியிருந்ததையும், 13 கி.மீ தூரத்தில் உள்ள புலிக்காயத்தில் ஷாஜூ தனது பெற்றோருடன் தொடர்ந்து தங்கியதையும் அக்கம்பக்கத்தினர் நினைவு கூர்ந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் டாம் மற்றும் அன்னம்மாவின் இளைய மகன் ரோஜோ அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் மீண்டும் இவ்வழக்கை தூசித் தட்டினர். ரோஜோ நீண்ட காலமாக சந்தேகத்திற்குரியவர் என்று அண்டை வீட்டுக்காரர் ஆயிஷா கூறுகிறார். "அவர் கேரளாவுக்கு வந்தபோது (அமெரிக்காவிலிருந்து) வீட்டில் தங்கமாட்டார். ஜாலி சமைத்த உணவை உட்கொள்ள மாட்டார். அவர் ஹோட்டலையே விரும்பினார்"
“ஜாலிக்கு இடுக்கியில் வசிக்கும் நான்கு சகோதரர்கள் உள்ளனர். அவளுடைய சட்டப் போரை அவர்கள் கவனித்துக் கொள்ள முடியும்," என்கிறார் ஷாஜு. ஆனால், அவருக்கென்று ஆஜராக இதுவரை எந்தவொரு வழக்கறிஞரும் வரவில்லை.
47 வயதான ஜாலி, கொலை செய்ததற்காக எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்று கோழிக்கோடு ஊரக எஸ் பி கே ஜி சைமன் கூறுகிறார். "ஒவ்வொரு கொலையும் அவளை மிகவும் தைரியசாலியாகவும் தைரியமாகவும் ஆக்கியது" என்று அவர் கூறுகிறார்.
நகைக் கடை வைத்திருந்த விற்பனையாளரான எம்.எஸ். மேத்யூ மற்றும் கோல்ட்ஸ்மித் பிரேஜி குமார் ஆகியோரையும் சயனைடு வழங்கிய குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். எஸ்.பி.யின் கூற்றுப்படி, ஜாலி ஏன் விஷத்தை வாங்குகிறார் என்று மேத்யூவுக்குத் தெரியும், குமார் அதை அவருக்குக் கொடுத்தார். நகைகளை தயாரிப்பதில் / மெருகூட்டுவதில் சயனைடு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஜாலி மற்றும் தாமஸின் இரண்டு மகன்கள் இப்போது கொச்சியை தளமாகக் கொண்ட அவரது சகோதரி ரெஞ்சியுடன் உள்ளனர். மகன்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை ஊடகத்திடம், “உண்மை வெளிவரட்டும்… குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. கற்பனை செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாத விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன." என்றார்.
பள்ளி ஆசிரியரான ரென்ஜி, "பெற்றோரின் மரணத்தின் பின்னணியில் உண்மை வெளிவந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். “எனது பெற்றோரும் சகோதரரும் இறந்தபோது ஜாலி சொன்னதை நாங்கள் நம்பினோம். இந்த கொலைகளில் மற்றொரு நபர் ஈடுபட்டதாக நான் நம்புகிறேன். அதை போலீசார் நிரூபிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.