kerala cyanide murders : கேரளாவில் 14 ஆண்டுகளில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை உணவில் சயனைடு கலந்து கொடுத்து பெண் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6 கொலைகளையும் தானே செய்தேன் என்று அப்பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாலி ஜோசப். இவர் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கட்டாய திருமணத்தால், ஜாலி மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த சூழலில் தனது மாமானாரின் அண்ணன் மகன் சாஜூ மீது ஜாலிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் இதேபோன்ற எண்ணம் இருந்துள்ளது. இவர்கள் இணைவதற்கு குடும்பத்தினர் தடையாக இருந்தனர். எனவே அவர்களை கொன்றுவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர் மூலம் ஜாலி சயனைடு வாங்கி வந்துள்ளார். வழக்கமாக ஜூலி குடும்பத்தினர் இரவு உணவிற்கு பின்பு, சூப் சாப்பிடுவது வழக்கம். இதை கொலை செய்வதற்கான வாய்ப்பாக ஜாலி பயன்படுத்திக் கொண்டார்.
அதேசமயம் அனைவரையும் ஒரே நேரத்தில் கொலை செய்து விட்டால் சிக்கிக் கொள்வோம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு, கொலையை அரங்கேற்றலாம் என்று ஜாலி முடிவு செய்துள்ளார்.
முதலில் 2002ஆம் ஆண்டு மாமியார் அன்னம்மாவிற்கு மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கியதால், உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரத்தப் பரிசோதனை நடத்தி, இறப்பிற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டுபிடிக்க தவறியதால் அடுத்தடுத்த கொலைகள் அரங்கேற வாய்ப்பாக இருந்துள்ளது. இதே பாணியில் 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸ், 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸ் ஆகியோரை கொன்றுள்ளார்.
இந்த சூழலில் அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவிற்கு ஜூலியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் 2014ஆம் ஆண்டு மேத்யூவிற்கு மட்டன் சூப் கொடுக்க பிரச்சினை முடிவுக்கு வந்தது. தன்னுடைய வீட்டில் அனைவரையும் கொன்றாகி விட்டது. இதையடுத்து தனது காதலர் சாஜூவின் வீட்டின் மீது கவனம் திரும்பியது. அவருக்கு மனைவி சிலி, 10 மாத பெண் குழந்தை ஆகியோர் இருந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு மட்டன் சூப் கொடுத்து, இவர்கள் இருவரையும் ஜாலி கொலை செய்துள்ளார். இதனால் ஜாலி - சாஜூ ஒன்றுசேர தடையாக யாரும் இல்லை. இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து குடும்பத்தினரின் சொத்துகளை தன் பெயருக்கு ஜூலி மாற்றி எழுதிக் கொண்டார். இந்த சூழலில் இருவர் மீதும் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ஜூலியின் முன்னாள் கணவர் ராயின் சகோதரர், இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து சாஜூவின் முன்னாள் மனைவி சிலியின் உறவினர்களும் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.