கேரளாவில் உள்ள திருவல்லாவில் இருக்கும் ஜாலி சில்க்ஸ் என்ற ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் சுப்ரியா. சில வாரங்களுக்கு முன்பு, பேருந்து ஏற முடியாமல் திணறிக் கொண்டிருந்த பார்வை குறைபாடு உடையவருக்காக ஓடிச் சென்று பேருந்தை நிறுத்தினார் சுப்ரியா. பிறகு அந்த நபரை பத்திரமாக பேருந்தில் வைத்து, சரியான நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மேலும் படிக்க: மனிதம் இன்னும் இறக்கவில்லை ; இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்!
சுப்ரியாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை பார்த்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் சுப்ரியாவை அவருடைய வீட்டில் சென்று பார்த்து வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் திருச்சூரில் இருக்கும் தலைமை நிறுவனத்தில் வந்து தன்னை சந்திக்குமாறும் குறிப்பிட்டார்.
தலைமை அலுவலகத்தில், அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் முன்னிலையில் சுப்ரியாவிற்கு வீடு ஒன்று வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஜாய் ஆலுக்காஸ். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுப்ரியா ”மனிதாபிமான அடிப்படையில் நான் செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய பாராட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil