ஒவ்வொரு வருடமும் துள்ளல் இசையுடன் கேரளம் முழுவதும் ஓணத்திற்காக செண்ட மேளம் இசைக்கும். வண்ண வண்ண மலர்களுடன் பூக்கோலமிட்டு, ஆடல் பாடல் என சிறப்பாக கேரள வீதிகள் எங்கும் ஓணம் திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால் இம்முறை, கடுமையான வெள்ளம் மற்றும் வரலாறு காணாத மழைப்பொழிவின் காரணமாக ஓணம் திருநாள் கொண்டாடப்படுமா என்ற எண்ணம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வந்து போனது.
பல்வேறு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கேரள மக்கள் தங்கள் நிவாரண முகாம்களில் பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக ஆனந்தமாக ஓணத்தினை கொண்டாடி வருகிறார்கள் மலையாள மக்கள்.
தேசத் தலைவர்கள் மற்றும் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள் மலையாள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர மகாபலி உதவுவார் என்று ஓணம் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்கள்.
வெள்ள நிவாரண முகாமில் ஓணம் பண்டிகை
கேரளாவில் இருக்கும் களமச்சேரி பகுதியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் ஒன்று சேர்ந்து இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். கேரளம் மெல்ல மெல்ல பாதிப்பில் இருந்து வெளிவருவது போன்ற பூக்கோலமிட்டு ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர்.