Kevin Joseph honor killing case : கேரளாவில் கடந்த ஆண்டு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு கெவின் பி. ஜோசப்பின் ஆவணப்படுகொலை ஆகும். கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்தவர் 24 வயது மிக்க கெவின் பி ஜோசப். அவர் தலித் சமூகத்தை சேர்ந்த கிறிஸ்துவர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த உயர் வகுப்பு கிறிஸ்துவரான நீனு சாக்கோவை திருமணம் செய்து கொண்டார் கெவின்.
இரட்டை ஆயுள் தண்டனை
பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி நடைபெற்ற திருமணம் என்பதால், நீனுவின் பெற்றோர்கள், கெவினை கடந்த வருடம் கொலை செய்தனர். இதனால் கேரளாவில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. தலித் அமைப்புகள், டி.ஒய்.எஃப்.ஐ அமைப்புகள் மற்றும் எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 10 நபர்களுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுஅ. இது குறித்து கெவினின் அப்பா ஜோசப் கூறுகையில் “இதனால் நான் மகிழ்ந்தேனா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. நீனுவின் அப்பா சாக்கோ இன்னும் வெளியில் தான் இருக்கிறார். அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் தான் என்று கூறுகிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த வழக்கை சரியாக முறையாக விசாரணை செய்த காவல்துறையினர் தான் என்னை விட இந்த வழக்கிற்கு அதிகம் உழைத்தவர்கள் .அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று கூறிய ஜோசப் ”நான் நீனுவுடன் பேசியதில்லை. அவள் படிக்கின்றாள். அவள் நன்றாக படிக்கட்டும். என்னைவிட அதிகம் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்றும் ஜோசப் குறிப்பிட்டார்.
கடத்தல் மற்றும் கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் கைது செய்யபட்டு அவர்களுக்கு தண்டனையை உறுதி செய்தார் வழக்கறிஞர் சி. ஜெயசந்திரன். நீனுவின் அப்பா உட்பட நான்கு நபர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.