காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை குற்றத்தில் தொடர்பு இருப்பதாக இந்திய தூதர் சஞ்சய் குமார் வெர்மா மீது கனடா அரசு குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, அவரை நாடு திரும்புமாறு அறிவுறுத்தியது. அதனடிப்படையில், இந்தியா திரும்பிய வெர்மா நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவின் சொத்துகளாக பாவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான நல்லுறவை ஜஸ்டின் ட்ரூடோ முறித்துக் கொண்டார் எனத் தெரிவித்துள்ள வெர்மா, சில ஜி7 நாடுகள் சட்டத்திற்கு புறம்பான கொலைக்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Khalistan extremists Canada deep assets, Justin Trudeau destroyed ties: Indian envoy
நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு இருப்பதாக கனடா அரசு குற்றஞ்சாட்டியுள்ள போதிலும், அது தொடர்பாக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என வெர்மா கூறியுள்ளார். கனடாவுடனான நட்புறவை இந்தியா தொடரும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் தவிர்த்த செயல்பாடுகளில் அதன் தாக்கம் இருக்காது எனக் கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்தியா மீது கனடா சுமத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்தவொரு ஆதாரமும் அளிக்கப்படவில்லை எனக் கூறிய வெர்மா, உண்மையிலேயே ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்வது தானே சட்டத்திற்குடப்பட்டது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் முக்கிய பிரதிநிதியாக விளங்கிய வகையில் தான் எந்தவொரு குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என வெர்மா தெளிவுபடுத்தியுள்ளார். காலிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்ததாக தன் மீது விமர்சனம் எழுந்ததற்கு பதிலளித்த வெர்மா, தன் தேசத்தின் நலனுக்காக கண்காணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டத்திற்கு புறம்பாக எந்த செயல்களும் அரங்கேறவில்லை எனவும், அனைத்தும் வெளிப்படைத்தன்மையுன் இருந்ததாகவும் வெர்மா கூறியுள்ளார். தங்களுக்கும் பஞ்சாபி தெரியும் என்பதால், காலிஸ்தானின் சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் புரிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது இந்தியாவின் குறி இருந்ததா எனக் கேட்கப்பட்ட போது, ஒருபோதும் அவ்வாறு செயல்பட்டதில்லை என வெர்மா பதிலளித்தார்.
அதேவேளையில், கொலை குற்றங்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டுள்ள வெர்மா, நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை முற்றிலும் அறிந்து கொள்ள, அதன் தொடக்கப்புள்ளியில் இருந்து விசாரிக்க வேண்டும். அதற்கு, இரு தரப்பினரும் தங்கள் வசமுள்ள ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வெர்மா குறிப்பிட்டுள்ளார். நாடு கடத்தல் தொடர்பான குற்றங்களில் இது போன்ற ஆதார பகிர்வுகள் நடைபெறுவது வழக்கம் தானே? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் கொலைக் குற்றத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், சில ஜி7 நாடுகள் அவ்வாறு செயல்பட்டதாக குற்றச்ஞாட்டியுள்ளார். ஆனால், அது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறிய வெர்மா, இரட்டை நிலைப்பாடு இருக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இந்தியா அது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதில்லை எனத் திட்டவட்டமாக கூறினார்.
இதேபோல், காலிஸ்தான் நிர்வாகி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது அமெரிக்க குற்றச்சாட்டு சுமத்தியது தொடர்பான கேள்விக்கு, அது குற்றச்சாட்டு தான் எனவும், அதற்காக தண்டனை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். அந்த விவகாரம் சட்டத்திற்குட்பட்ட வகையில் விசாரிக்கப்படும் என வெர்மா கூறியுள்ளார். மேலும், அது குறித்து இந்தியாவும் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறிய அவர், மேற்கொண்டு அதனை குறித்து பேச முடியாது எனத் தெரிவித்தார்.
நிஜ்ஜாரின் படுகொலையில் கனடா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டிய வெர்மா, அடிப்படை ஆதராங்களின்றி இந்தியாவிற்கு இதில் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ பாராளுமன்றத்தில் பேசியதாக கூறினார். அது முதலே, இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்கு கல்வி பயில வந்த அப்பாவி மாணவர்கள் எவ்வாறு கொலைக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து தனக்கு புரியவில்லை எனக் கூறிய வெர்மா, அது தொடர்பாக தன்னிடம் தகவல்கள் இல்லை எனக் கூறினார்.
செவிவழிக் கதைகளைக் கேட்டு அவற்றை ஆதாரம் என கனடா அரசு கூறுவதாக தெரிவித்த வெர்மா, இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்கள் தான் அவற்றையெல்லாம் ஆதாரம் எனக் கருதுவார்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.
கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் அவருடன் கூட்டணி வைத்திருப்போர் மீது தங்களுக்கு அவநம்பிக்கை உள்ளதாக வெர்மா தெரிவித்துள்ளார். இருநாட்டின் பாதுகாப்பு அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மிக கவனமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் அதிகளவில் ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார். எனினும், அதற்கான ஆதாரங்களை தான் அளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் கனடா தூதர்கள் மாற்றம், இருநாட்டு உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, அது இரு நாட்டு அரசும் பேசி முடிக்க வேண்டிய காரியம் எனக் கூறியுள்ளார். கனடா மற்றும் இந்தியா என்றும் நட்புறவுடன் இருக்கும் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை கூட, மற்ற நாடுகளுடன் இருப்பதைப் போன்று தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த விவகாரம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றும் வெர்மா கூறியுள்ளார். இந்தியாவின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கனடா ஈடுபடக் கூடாது எனப்தே தனது விருப்பமாக இருப்பதாக வெர்மா குறிப்பிட்டுள்ளார்.
வணிகம், கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்றவற்றில் இந்தியா - கனடா இடையே எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறிய வெர்மா, அரசியலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் இவை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.