Khan Market gang remark : இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேர்காணல் ஒன்றை கொடுத்தார். அதில் "மோடியின் இன்றைய பிம்பம், (இம்ரான்) கான் மார்க்கெட் கேங் உறுப்பினர்களாலும், டெல்லியினாலும் உருவாக்கப்படவில்லை. மோடியின் பிம்பம் அவனுடைய 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையால் / பணியால் உருவாக்கப்பட்டது. நல்லவை கெட்டவை என இரண்டுக்கும் இது பொருந்தும்.
அதை நீங்கள் மாற்ற இயலாது. ஆனால் கான் மார்க்கெட் கேங், முன்னாள் பிரதமரை தான் மிஸ்டர் க்ளீன் (ராஜீவ் காந்தி) என்று ஒவ்வொரு முறையும் மாற்ற முயல்கின்றார்கள்" என்று கூறினார். இது குறித்து நேற்று ப்ரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.
ப்ரியங்கா மற்றும் ராகுல் காந்தியின் பதில்கள்
நேற்று டெல்லி உட்பட 7 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தங்களின் வாக்கினை பதிவு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ப்ரியங்கா காந்தி. அதில் மோடியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது "மோடி தன்னுடைய வாழ்நாளில் 50 மணி நேரமாவது முறையாக தியானம் செய்திருந்தால், இப்படி வெறுப்பினை கொட்டும் பேச்சுகளை பேசியிருக்கமாட்டார்” என்று கூறினார்.
மக்கள் இந்த ஆட்சியில் பெரும் இழப்பை சந்தித்து வேதனையில் இருக்கின்றனர். மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் தேவையற்ற அனைத்தையும் பேசுகின்றார். மக்கள் தங்களின் கோபத்தினை இந்த தேர்தலில் வெளிக்காட்டுகின்றார்கள் என்றும் கூறினார் ப்ரியங்கா காந்தி.
ராகுல் காந்தியிடம் இது குறித்து பேசிய போது “ நரேந்திர மோடி வெறுப்பு அரசியல் மூலம் இந்த தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று யோசிக்கின்றார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, இந்த தேர்தலை அன்புடன் சந்திக்கிறது. இந்த தேர்தலின் போது இந்தியர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகள் நான்கு தான். வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் நலன், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட நட்டம், இதனை சரி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் டஃப் ஃபைட் கொடுத்துள்ளது. மக்கள் தான் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க : காங்கிரஸ் தலைமைப் பதவி ஒரு இஸ்லாமியருக்கு கிடைப்பதை ராகுல் உறுதி செய்வாரா? பிரதமர் மோடி ஸ்பெஷல் பேட்டி