கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் இருவருமே, முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்பட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஆனால் முதல்வர் யார் என்பதில்தான் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
” பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் எங்களை தேர்வு செய்துள்ளனர். சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
” இந்நிலையில் இந்த வெற்றி எல்லாருக்குமானது. யாருமே இந்த வெற்றியை தனியாக நாங்கள் மட்டுமே செய்தோம் என்று கூற முடியாது. தலைவர்கள் இதுபோல நன்றாக வேலை செய்தால், இதுபோன்ற வெற்றி கிடைக்கும். இந்நிலையில் சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு வாழ்துகளை தெரிவித்துகொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வெற்றி தொடர்பாக டி.கே சிவகுமார் கூறுகையில் “ இது எனக்கோ அல்லது சித்தராமையா அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. இது மக்களுக்கான வெற்றி. கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகாவை சூழந்த இருள் விலகி உள்ளது. கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சிரிப்பு மலர்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் “ 40 % கமிஷன் அரசு, விவசாயிகளுக்கு தொடர்ந்து தொல்லை மற்றும் குடும்ப தலைவிகளின் கண்ணீருக்கு காரணமாக இருந்தவர்கள் இன்று தோல்வி அடைந்துள்ளனர். இது விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராக கிடைத்த வெற்றி. ஒரு முதல்வருக்கு மேலாக, முதல்வர்கள் ஆட்சி செய்தால் அந்த அரசு நிலைத்தன்மையுடன் இருக்காது ” என்று கூறினார்.
மேலும் சிவக்குமார் கூறுகையில் “ சோனியா காந்தியிடம், சத்தியம் செய்து கொடுத்ததுபோல், கர்நாடகாவில் வெற்றி பெற்று அவரிடம் கொடுத்துவிட்டேன். காங்கிரஸ் மரபுப்படி மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.
காங்கிரச் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் சந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் “ இது வரலாற்று நிகழ்வு. ஜனநாயகத்தின் புதிய வெளிச்சத்தை கர்நாடக மக்களுக்கு மட்டும் இல்லாது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே காட்டியுள்ளது கர்நாடகா. ராகுல்காந்தி கொடுத்த 5 வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். வெளிப்படைத்தன்மையான அரசை கட்டமைப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.