ஆந்திர மாநிலத்தில் உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், தன்னுடைய உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்திற்கு இடம் மாற்ற செய்ய உள்ளதாக வந்துள்ள தகவலால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தென்கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திராவில் தனது தொழிற்சாலையை அமைக்க அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. மூன்று ஆண்டுகளாக கட்டுமானப்பணி நடந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் இந்த ஆலையில் வாகன உற்பத்தி துவங்கியது. சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் சுமார் 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். உலகின் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த ஆலை, ஆந்திராவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் பல சிக்கல்களை சந்தித்தது.
ஜெகன் அரசால் சிக்கல் : ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசத்திடம் இருந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்துள்ள பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகிறார். அத்துடன் அந்த அரசு எடுத்துள்ள பல முடிவுகளும் தற்போது மாற்றப்பட்டு வருகின்றன.
கியா மோட்டார்ஸ் ஆலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 12000 வேலை வாய்ப்புக்களை இந்த தொழிற்சாலை உருவாக்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆந்திர அரசு, அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 75% பணியை மாநிலத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் பல பணிகளுக்குத் தேவையான ஊழியர்களை நியமிக்க கடினமாக உள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. . மேலும், முந்தைய அரசுடன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சாரம் கட்டணம், வரிகள், நில கட்டணங்கள் ஆகியவற்றில் சலுகைகளுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. . ஆனால் தற்போதைய அரசு இதுபோல பல வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தங்களை மாற்றி அமைத்து வருகிறது.இந்த காரணங்களால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை ஆந்திராவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்துக்கு மாற்ற உத்தேசித்துள்ளதாகவும் இது குறித்த சாத்தியங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கியா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்குத் தேவையான உதிரிப்பாகங்களை தமிழகம் அளித்து வருவதால், தனது தொழிற்சாலையைத் தமிழகத்துக்கு இடம் பெயர கியா ஆர்வம் காட்டுவதாக ராய்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுப்பு : ஆனால், இந்த செய்திக்கு, கியா மோட்டார்ஸ் நிறுவனமும், ஆந்திர அரசும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.