கிச்சா சுதீப் பிப்ரவரி 17-ம் தேதி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரை சந்தித்ததில் இருந்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ‘நண்பர்’ முதல்வர் பசவராஜ் பொம்மைக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய சுதீப் பிரதமர் மோடியை பாராட்டினார்.
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் தேர்தலில் என்ன பங்கு வகிப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்பு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் புதன்கிழமை பரபரப்பாக காணப்பட்டது.
49 வயதான நடிகர் கிச்சா சுதீப் பா.ஜ.க-வில் போட்டியிடுவார் அல்லது பா.ஜ.க-வுக்காக பிரச்சாரம் செய்வார் என்று ஒரு சலசலப்பு தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, நடிகருக்கு அச்சுறுத்தல் செய்தி வந்தது. இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அரசியலில் அவர் எந்தப் பங்கையும் வகிக்க வேண்டாம் என வலியுறுத்தி ட்விட்டரில் பிரச்சாரம் செய்தனர். இறுதியாக, முதல்வர் பசவராஜ் பொம்மையின் பக்கம் நின்ற, கிச்சா சுதீப் வரும் தேர்தலில் “எனது நண்பர்களுக்காக மட்டுமே பிரச்சாரம் செய்வேன். எனது நன்பர்களில் ஒருவர் முதல்வர்.” என்று அறிவித்தார்.
கட்சிகள் கடந்து அரசியல்வாதிகளுடன் சுதீப் சுமூகமான உறவைப் பகிர்ந்து கொள்வதாக அறியப்பட்ட நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரை சந்தித்ததுதான் அவரது அரசியல் பிரவேசம் குறித்து முதலில் பேசத் தொடங்கினர்.
அதை நிராகரித்த நடிகர் சுதீப், “இந்த அழைப்பை ஏற்பதற்கு முன் பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதில் எனது ரசிகர்களின் கருத்துகளும் அடங்கும்” என்று கூறினார். ஊடகங்களில் அவர் கூறியது: டி.கே.சிவக்குமார், முதல்வர் பொம்மை, அமைச்சர் டி.கே.சுதாகர் ஆகியோரை சந்தித்தேன். நான் அனைவருடனும் நல்ல உறவை வைத்துள்ளேன். ஆனால், எனது அரசியல் பிரவேசம் குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் முடிவெடுக்கும் போது அதை பகிரங்கமாக அறிவிப்பேன்” என்று கூறினார்.
முன்னதாக, பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் 2020 இடைத்தேர்தலின் போது பா.ஜ.க எம்.எல்.ஏ முனிரத்னாவுக்காக சுதீப் பிரச்சாரம் செய்தார்.
ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் சுதீப், பழங்குடி நாயக்க சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது, பா.ஜ.க-வுக்கு ஆதரவளிப்பதில் இருந்து அவர் சமூகம் விலகிவிடக் கூடாது என்பதற்கான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள காங்கிரஸின் கர்நாடக பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, விசாரணை அமைப்புகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். 2019-ம் ஆண்டில், வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட சாண்டல்வுட் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் சுதீப் இருந்தார்.
“ஒரு சினிமா நட்சத்திரம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதைத் முடிவு செய்யலாம். சில நேரங்களில் வருமான வரித்துறை – அமலாக்க இயக்குனரகம் அல்லது வேறு ஏதேனும் அமைப்பு முடிவு செய்கிறது. கர்நாடகாவில் பா.ஜ.க-வின் தோல்வி நிலை தெளிவாகிறது. முதல்வர் பொம்மை மற்றும் பா.ஜ.க தலைவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் முன்வராததால், தற்போது சினிமா நட்சத்திரங்களை நம்பி கூட்டத்தை ஈர்க்கிறார்கள். கர்நாடகாவின் தலைவிதியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள், சினிமா நட்சத்திரங்கள் அல்ல” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி. குமாரசாமி கூறியதாவது: “அவர்கள் உறுதியான ஆதரவை வழங்கவில்லை. தனிப்பட்ட நட்பு காரணமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மக்கள் முடிவெடுப்பார்கள்” என்று கூறினார்.
கர்நாடகாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான சுதீப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கன்னட திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்தார். விக்ரம் நடித்த தமிழ் ஹிட் சேதுவின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான 2000 திரைப்படம் ஹுச்சா அவரது முதல் பெரிய வெற்றிப் படம். தும், நந்தி, கிச்சா, ரங்கா (எஸ்.எஸ்.எல்.சி), ஜஸ்ட் மாத் மாதல்லி, கெம்பே கவுடா, விஷ்ணுவர்தனா ஆகியவை அவரது மற்ற வெற்றிப் படங்களில் அடங்கும். மை ஆட்டோகிராப் (2006) மூலம் சுதீப் இயக்குநராக மாறினார். இது தமிழில் ஹிட்டான ஆட்டோகிராஃப் படத்தின் ரீமேக் ஆகும். சுதீப் ஒரு திரைக்கதை எழுத்தாளர், பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் கோபால் வர்மாவின் ஃபூங்க் (2008) திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கானுடன் ரான் மற்றும் தபாங் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் பேண்டஸி நாடகமான ஈகாவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் கப்சா. 2013-ல் பிக் பாஸ் கன்னடத்தின் தொடக்கத்திலிருந்து அவர் முகமாக இருந்தார்.
கடந்த ஆண்டு ஒரு திரைப்பட நிகழ்வில், “இந்தி இனி தேசிய மொழி இல்லை” என்று கூறியதற்காக நடிகர் சுதீப் செய்திகளில் அடிபட்டார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், “இந்தி எங்கள் தேசிய மொழியாக இருந்தது மற்றும் இருக்கும்” என்று ட்வீட் செய்திருந்தார். வேறொரு சூழலில் தான் இந்த அறிக்கையை வெளியிட்டதாகக் கூறிய சுதீப் பதிலளித்தார்: “நீங்கள் இந்தியில் அனுப்பிய குறுஞ்செய்தி எனக்குப் புரிந்தது. நாம் அனைவரும் ஹிந்தியை மதித்து, நேசித்து, கற்றுக்கொண்டோம். குற்றமில்லை சார், ஆனால், எனது பதிலை கன்னடத்தில் தட்டச்சு செய்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன்.!!” என்று பதிலளித்தார்.
புதன் கிழமையன்று அவர் இறுதியாக அரசியலில் குதிக்க முடிவு செய்ததாக செய்தி பரவிய உடனேயே, சுதீப் சமூக ஊடகங்களில் ஒரு தனிப்பட்ட வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி அடையாளம் தெரியாத ஒரு நபரிடமிருந்து கடிதம் வந்தது. அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #WedontwantKicchchainpolitics என்ற ஹேஷ்டேக் பிரச்சாரத்தைத் தொடங்கினர். கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்றும், அரசியல் சதுரங்கக் காயாக பயன்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“