கிரண்பேடி அதிரடி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, அதிரடியான அட்வைஸுக்கும் பெயர் பெற்றவர் போல! ‘கணவர் அடித்தால் திருப்பித் தாக்கு’ என்கிறார் அவர்.
கிரண்பேடி, டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்தவர்! பிறகு அன்னா ஹசாரே குழு மூலமாக அரசியலுக்கு ‘என்ட்ரி’ கொடுத்தார். பாஜக.வின் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதினார். அதில் தோற்றாலும், அவருக்கு ஆறுதல் பரிசாக புதுவை கவர்னர் பதவியை மத்திய அரசு கொடுத்தது.
கிரண்பேடி புதுவை வந்ததும், அந்த மாநில முதல்வர் நாராயணசாமியுடன் பல்வேறு நிர்வாக விவகாரங்களில் மல்லுக்கட்டினார். கிரண்பேடி தொடர்பான சர்ச்சை இல்லாமல் புதுவையில் ஒரு நாள் விடிந்தாலே பெரிய விஷயம்! இந்தச் சூழலில் லேட்டஸ்டாக அவர் தனது பேச்சிலும் அனலைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் உள்ள அம்பக ரத்தூர் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் வளாகத்தில், புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் உலக மகளிர்தினவிழா நடை பெற்றது. விழாவிற்கு, புதுவை கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். பள்ளி படிப்பில் சிறந்த சாதனை படைத்த மாணவிகள் மற்றும் சிறந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பெண்கள் அரசு வேலையை மட்டும் நம்பியில்லாமல், சுயதொழில் செய்ய முன் வரவேண்டும். சுய தொழில் தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதேபோல், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மாநில வளர்ச்சிக்காக அயராது பாடுபட வேண்டும். அவரவர் கடமைகளை சிறப்பாக செய்யவேண்டும்.
இந்தியாவில் சிறந்த மாநிலமாக புதுவையை கொண்டுவர அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். காசு பணம் உள்ளவர்கள் ஏழைகள் என்று கூறி அரசின் உதவிகளை பெறக்கூடாது. உண்மையான ஏழைகளுக்கு தான் அரசின் உதவிகள் சென்று சேரவேண்டும். இதில் அரசுத்துறை அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
சமுதாயத்தில் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. நம்மிடம் என்ன உள்ளதோ அதைகொண்டு சமுதாயத்தில் தைரியத்துடன் முன்னேறவேண்டும். சாதாரணமாக வீட்டில் கணவன்மார்கள் பெண்களை அடித்து துன்புறுத்தினால், அடங்கி போகக்கூடாது. கொஞ்சமாவது எதிர்ப்பை காட்ட வேண்டும். திருப்பி தாக்க வேண்டும். அப்போதுதான் எதையும் தைரியத்துடன் பெண்கள் எதிர்கொள்ள முடியும்.
குழந்தைகளின் கல்வி விசயத்தில் பெண்கள் தனி அக்கறைகாட்ட வேண்டும். பெண்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது. பலருக்கு வேலை கொடுப்பவர்களாக உயர வேண்டும். புதுவை மாநிலத்தில் நிதி பற்றாக்குறை உள்ளது. அண்மையில் புதுவை வந்த பிரதம மந்திரியிடம், நிதி பற்றாக்குறை குறித்து பேசிஉள்ளேன். விரைவில் புதுவைக்கான நிதி வரும். நானும் இனி ஒவ்வொரு நொடியும் புதுவை வளர்ச்சிக்காக பாடுபடுவேன். இவ்வாறு பேசினார்.
கிரண்பேடியின் பேச்சு, விவாதங்களை கிளப்பியிருக்கிறது.