Advertisment

சாலை வரி மோசடியை விசாரிக்கும் கிரண் பேடி! விசாரணை வளையத்தில் சிக்கும் பாஜக தலைவர் சுரேஷ் கோபி!

சுரேஷ் கோபி மீது நடவடிக்கை எடுத்தால், கேரளாவில் பாஜகவின் அரசியல் நகர்வுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை ஆளுநர் கிரண் பேடி நிச்சயம் உணர்ந்திருப்பார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுரேஷ் கோபி, நடிகை அமலாபால், சாலை வரி ஏய்ப்பு, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி

சுரேஷ் கோபி, நடிகை அமலாபால், சாலை வரி ஏய்ப்பு, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அமலாபால், கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்ரக பென்ஸ் எஸ் கிளாஸ் காரை வாங்கினார். இதன் விலை ரூ. 1.5 கோடி. இந்த காரை அவரது சொந்த மாநிலமான கேரளத்தில் வாங்கியிருந்தால் அரசுக்கு ரூ. 23 லட்சம் வரை வரி செலுத்த வேண்டும். ஆனால், புதுச்சேரியில் ஒரு சதவீதம் மட்டும்தான் வரி என்பதால், கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் வரை சேமிக்க நினைத்து, ரூ. 1.5 லட்சம் வரை வரி கட்டி விட்டு, நீண்ட நாட்களாக கேரளத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்.

Advertisment

இவ்விவகாரம் குறித்து புகார்கள் எழுந்ததால், இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் அறி்ககை தாக்கல் செய்ய போக்குவரத்துத்துறை செயலர் மற்றும் ஆணையருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான், "இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஒருவர் வாகனம் வாங்கலாம். அதில் போக்குவரத்து விதிப்படி தடையில்லை. நடிகை அமலாபால் கர்நாடகத்தில் பென்ஸ்கார் வாங்கினார். சட்டரீதியாக தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரிக்கு எடுத்து வந்து 8.8.2017ல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். தனது இருப்பிடத்தை உறுதி செய்ய, தனது கையெழுத்துடன் கூடிய அபிடவிட்டை அவர் தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசியும் இம்முகவரியில் இருந்து தந்துள்ளார். இதில் தவறே நடக்கவில்லை. விதிமுறைப்படிதான் நடந்துள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்" என்றார்.

அமைச்சரின் இந்த விளக்கத்துக்கு பதில் அளித்துள்ள ஆளுநர் கிரண் பேடி, "அந்த அமைச்சரே கார் விற்கும் வியாபாரி தான். புதுச்சேரியில் அவரது தந்தை செய்துவந்த அந்த தொழிலை இப்போது அமைச்சர் செய்து வருகிறார். புதுச்சேரியை சேராதவர்கள், இங்கு அவர்களது வாகனங்களை பதிவு செய்வதை நாம் தடுத்தால், அவரது வியாபாரம் நஷ்டத்தைக் கூட சந்திக்கலாம். இவ்விவகாரத்தில் நான் அமைதியாக இருந்தால், இதுபோன்ற தகவல்களை நான் ஊக்குவிப்பதாகிவிடும்" என்றார்.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த நடிகரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் மீதும் இதேபோன்றதொரு புகார் எழுந்தது. இவர் தமிழில் தீனா, ஐ போன்ற படங்களில் நடித்தவர்.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், புதிய ஆடி Q7 காரை வாங்கிய சுரேஷ் கோபி, அதனை புதுச்சேரியில் பதிவு செய்துள்ளதாகவும், இதற்கு அவர் ரூ.1 லட்சம் மட்டும் சாலை வரி செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது சொந்த வீடு கேரளாவில் உள்ள நிலையில், அங்கு அந்த காரை பதிவு செய்தால் ரூ.15 லட்சம் வரை அவர் வரி செலுத்த நேரிட்டிருக்கும். இதனால், 'கார்த்திக் அபார்ட்மென்ட்ஸ், 100 அடி சாலை, எல்லைபிள்ளைசாவடி, புதுச்சேரி' எனும் முகவரி கொடுத்து அவர் புதுச்சேரியில் தனது காரை பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுரேஷ் கோபியிடம் தகவல் பெற நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக முயற்சி மேற்கொண்ட போது பதிலளித்த நபர், 'இந்த எண் சுரேஷ் கோபிக்கு சொந்தமானது இல்லை' என்று கூறிவிட்டார்.

முன்னதாக இவ்விவகாரம் குறித்து சுரேஷ் கோபி மலையாள மீடியாக்களிடம், 'தேவைப்பட்டால் அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்க தயார்' என்றார்.

இதனிடையே, கேரள போக்குவரத்து ஆணையர் அனில் காந்த், புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சுந்தரேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரியில் சாலை வரி செலுத்துவதில் முறைகேடு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநர் கிரண் பேடியும், சுரேஷ் கோபியும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தான். அமலா பால் செய்ததாக கூறப்படும் வரி ஏய்ப்பு குறித்து தீவிரமான விசாரணை நடத்தி வரும் கிரண் பேடி, தற்போது தான் சார்ந்திருக்கும் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவரும் இதில் சிக்கியிருப்பதால், கிரண்பேடியின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. சுரேஷ் கோபி மீது நடவடிக்கை எடுத்தால், கேரளாவில் பாஜகவின் அரசியல் நகர்வுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார்.

இதனால், கிரண்பேடி விசாரணையைத் தொடர்வாரா அல்லது கட்சியின் நலனுக்காக இவ்விவகாரத்தை அப்படியே விட்டுவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

Lieutenant Governor Kiran Bedi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment