இலவச அரிசி விவகாரம்: ஒரேநாளில் உத்தரவை வாபஸ் பெற்ற கிரண் பேடி!

இலவச அரிசி விவகாரத்தில் கிரண்பேடி தனது உத்தரவை வாபஸ் பெற்றார்

இலவச அரிசி விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒரேநாளில் தனது உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

புதுச்சேரியை அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் துணைநிலை கிரண்பேடி சனிக்கிழமை (நேற்று) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில், சுத்தமான கிராமம் சான்றிதழ் பெற்றால் மட்டுமே, இனி பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்றும், சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்றும் அறிவித்தார். சான்றிதழ் பெறும் வரை அரிசி சேமிக்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும் என்றும் கிரண்பேடி கூறினார். இதுகுறித்த கடிதத்தையும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு அவர் அனுப்பியிருந்தார்.

கிரண்பேடியின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்தையும், தூய்மை இந்தியா திட்டத்தையும் இணைத்து வைத்து கிரண்பேடி பிறப்பித்த உத்தரவைச் சமூக ஊடகங்களிலும் பலர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், தமது உத்தரவை நிறுத்திவைப்பதாக கிரண்பேடி நேற்று இரவு அறிவித்தார். தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், கிராம மக்களுக்கான ரேஷன் பொருட்களை தடுப்பது தனது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், கிராம மக்கள் தங்கள் சுகாதார சூழ்நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இலவச அரிசி திட்டம் தொடர்பான தனது முந்தைய நிபந்தனையை வருகிற ஜூன் மாதம் வரை நிறுத்தி வைப்பதாகவும் கிரண்பேடி கூறியிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close