மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை சட்ட அமைச்சகத்திலிருந்து மாற்றப்பட்டார். அவருக்கு புவி அறிவியல் அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிஜிஜுவுக்குப் பதிலாக அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சராக உள்ளார்.
இதனை குடியரசுத் தலைவர் அலுவலக செய்திக் குறிப்புகள் உறுதிப்படுத்தி உள்ளன. முன்னதாக, "சில ஓய்வுபெற்ற நீதிபதிகள்" "இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதி" என்று ரிஜிஜு கூறியது பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பை பெற்றது.
ஜனவரி மாதம், ரிஜிஜு, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டுக்கு ஒரு கடிதம் எழுதி, நீதிபதிகளின் தேர்வுப் பட்டியலுக்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில், அரசு நியமனத்தில் ஒருவரைச் சேர்க்குமாறு பரிந்துரைத்தார்.
நீதிபதிகள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது.
அருணாச்சல பிரதேசத்தில் இருந்து மூன்று முறை மக்களவை எம்.பி.யாக இருந்த ரிஜிஜு, ஜூலை 2021 இல் சட்ட அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
டெல்லி பல்கலைக்கழக சட்டப் பட்டதாரியான இவர், முன்னதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுக்கான பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“