தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணையபோவதாக தகவல் வெளிவந்த நிலையில், 2023 சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக காங்கிரஸின் போட்டியாளரான கே.சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியுடன் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்த பிறகு, பிரசாந்த் கிஷோர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது, ரா மற்றும் டிஆர்எஸ் தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார். இது, காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்த தெலங்கானா காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், உங்கள் எதிரியுடன் நண்பனாக இருப்பவரை ஒருபோதும் நம்பாதீர்கள் என்கிற புகைப்படத்தை பதிவிட்டு, இது உண்மை தானா என கேள்வி எழுப்பியிருந்தார்.
கிஷோருடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, டிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமராவ், ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி ஐபேக்-வுடன் முறையாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் அதற்கும் கிஷோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
ஐபேக் கிஷோரால் நிறுவப்பட்டது. ஆனால், சமீப காலமாக கிஷோர் அந்நிறுவனத்தில் எந்த அதிகாரபூர்வ பதவியையும் கொண்டிருக்கவில்லை. அது மிகவும் சுதந்திரமான நிறுவனம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது மூன்று இயக்குநர்களின் தலைமையில் ஐபேக் செயல்படுகிறது.
அதன் இணையதளத்தில், ஐபேக் 9 பணிகளை “our work” என்ற தலைப்பின் கீழ் பட்டியலிட்டுள்ளது. அதில், 2014 இல் நரேந்திர மோடி மற்றும் 2021 இல் மம்தா பானர்ஜி மற்றும் மு.க ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐபேக் வட்டாரங்கள் கூற்றுப்படி, டிஆர்எஸ் கூட்டணியானது கிஷோர் பங்களிப்பு இல்லாமல் நடைபெற்ற முதல் ஒப்பந்தம் ஆகும். பிரஷாந்த் கிஷோரின் ஆசிர்வாதத்துடன் அல்லது இல்லாமலும் அதிக ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டிஆர்எஸ் உடனான ஒப்பந்தம், கட்சியை புத்துயிர் பெறுவதற்கான முன்மொழிவுகள் குறித்து கிஷோருடன் காங்கிரஸ் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் வந்துள்ளது. கிஷோர் கடந்த வாரத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைமைகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்.
கட்சியில் கிஷோரின் நுழைவு சாத்தியக்கூறுகளில் உள்ளது, அவரை சேர்க்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன. அவர் இணையபோவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஆர்எஸ் தவிர, ஐபேக் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து சாத்தியமான திட்டங்களைக் கொண்டுள்ளது.
மே 2021 இல், கிஷோர் காங்கிரஸுடன் தனது முதல் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸின் போட்டியாளரான திரிணாமுல் காங்கிரஸுடன் அவரும் ஐபேக்-வும் இணைந்து பணியாற்றியபோதும் அவர் சோனியா காந்தியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil